புதியவைவீடு-தோட்டம்

பெண்கள் துணி துவைத்தல்- உலர்த்துதலின் போது செய்யும் தவறுகள்

பெண்கள் துணி துவைத்தல்- உலர்த்துதலின் போது செய்யும் தவறுகள்

துணி துவைப்பதற்கு சரியான அளவில் டிடெர்ஜெண்ட் பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான டிடெர்ஜெண்ட் பயன்பாடு துணிகளில் கறைகளை போக்குவதற்கு உதவாது. கறைகள் நீங்கினாலும் அதில் டிடெர்ஜெண்ட் படிந்திருக்கும். ஒருவித வாசனையையும் ஏற்படுத்தும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற் படுத்தக்கூடும். சரியாக கவனத்தில் கொள்ளாவிட்டால் சருமத்தில் தொற்றுகள் ஏற்பட வழிவகுத்துவிடும். மேலும் அதிகப்படியான டிடெர்ஜெண்ட், சருமத்திற்கும், ஆடைக்கும் மட்டும் தீங்கு விளைவிப்பதில்லை. வாஷிங் மெஷினில் இருக்கும் மோட்டாரின் செயல்பாட்டுக்கும் தீங்கு விளைவித்துவிடும்.

துணிகளை துவைத்ததும் நன்றாக உலரவைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருக்கும் ஈரப்பதம், ஈஸ்ட் தொற்றுகள், பூஞ்சைகள் வளர்ச்சிக்கு வித்திடும். அப்படியே அலமாரியில் வைக்கும்போது துர்நாற்றம் வெளிப்படும். மற்ற துணிகளுக்கும் அதன் வீரியம் பரவியிருக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைந்துவிடும்.

வீட்டில் யாரேனும் உடல்நல பாதிப்புக்குள்ளாகி இருந்தால் அவர்களின் துணிகளை தனியாக வைக்க வேண்டும். மற்றவர்களின் துணியோடு சேர்த்து துவைக்கவும் கூடாது. ஏனெனில் அவர்களின் துணிகளில் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். அவற்றை கொல்வதற்கு சூடான நீரை பயன்படுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் நோயாளிகளின் துணிகளை தனியாக பராமரிப்பது அவசியமானது.

துணிகளை சுத்தம் செய்வதற்கும், அதில் இருக்கும் கிருமிகளை நீக்கம் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். டிடெர்ஜெண்ட் என்பது துணிகளில் இருக்கும் அழுக்கையும், கறை களையும் அகற்றுவதற்கு மட்டுமே பயன்படும். துணிகளை நன்கு துவைத்தாலும் அதில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த சூழல் நிலவும். துணிகளை சரிவர உலர்த்தாதபோது இந்த பிரச்சினை அதிகம் எட்டிப்பார்க்கும். ஆதலால் துணிகளை துவைத்த பிறகு கிருமி நாசினி உபயோகிக்கலாம்.

துணிகளை துவைத்ததும் வீட்டிற்குள்ளோ அல்லது நிழலிலோ உலர்த்துவது தவறானது. சூரிய ஒளியில்தான் துணிகளை உலர வைக்க வேண்டும். முக்கியமாக சூரிய ஒளி பாக்டீரியாக்களைக் கொல்ல உதவும். ஈரமான வாசனையையும் விரட்டியடித்துவிடும். அதேவேளையில் நீண்ட நேரம் சூரிய ஒளி துணிகளில் படிந்தால் அவற்றின் நிறம் மங்கிப்போய்விடும். ஆதலால் குறிப்பிட்ட நேரத்துக்குள் துணிகளை உலரவைத்துவிட வேண்டும்.

அழுக்குத்துணிகளை ஒரே இடத்தில் பல நாட்கள் சேமித்து வைத்திருப்பது தொற்றுக்கிருமிகள் பரவுவதற்கு வழிவகுக்கும். அழுக்குத்துணிகளை துவைத்த பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும். துணி துவைக்கும் இயந்திரம் அல்லது வாளியில் உள்ள தண்ணீரில் துணிகளை முக்கிவைக்கும்போது அனைத்து வகையான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அதில் படிந்திருக்கலாம். ஆதலால் துணிகளை துவைப்பதற்கு முன்பும், துவைத்த பிறகும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். ஈரமான ஆடைகளை அணிவதால் சிறுநீர் பாதையில் தொற்று (யு.டி.ஐ) ஏற்படலாம். ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பாதிப்பு உண்டாகக்கூடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker