பார்த்தாலே பசி எடுக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பு… இப்படி ஒரு முறை செய்து பாருங்க…
பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவதென்றால் அனைவருக்குமே பிடிக்கும். இது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்று சொன்னால் மிகையாகாது.
குறிப்பாக கிராமத்து பாணியில் மசாலாக்களை அரைத்து தயாரிக்கப்படும் குழம்புகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும்.
அப்படி கிராமத்து பாணியில் ஊரே மணக்கும் நெத்தலி கருவாட்டு குழம்பை எவ்வாறு அட்டகாசமான சுவையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு – 1கப்
கத்திரிக்காய் – 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
மல்லித் தூள் – 1 தே.கரண்டி
சீரகப் பொடி – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
மிளகுத் தூள் – 1/2 தே.கரண்டி
வறுத்த அரிசி மாவு – 1 தே.கரண்டி
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி- 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1/2 கப்
புளி – 1 எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 தே.கரண்டி
பூண்டு – 5 பற்கள்
எண்ணெய் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி சுத்தம் செய்மு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து புளியை தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காய் மற்றும் வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த கலவையை புளிச்சாற்றில் சேர்த்து நன்றாக கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கத்திரிக்காயையும் அதில் சேர்த்து நன்றாக வதக்கி, அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா நன்றாக கலக்கும் வகையில் கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும்.
இறுதியில் புளிக் கரைசலை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகம் வரையில் கொதிக்க விட்டு இறக்கினால், அசத்தல் சுவையில் மணமணக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு தயார்.