ஆரோக்கியம்மருத்துவம்

செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்

செல்பி மோகத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் பிரியர்களுக்கு ‘கேம் டிஸ்ஸார்டர்’, செல்போனை பிரிய நேர்ந்தால் ‘நோமோபோபியா’ மன கலக்கம் என பல்வேறு புதிய பாதிப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதிரவைக்கும் சில செல்போன் வியாதிகள் பற்றி பார்க்கலாம்….



மொபைல் எல்போ

ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான பின்பு பெரும்பாலான இயக்கங்களுக்கு பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை அதிகமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பெருவிரலில் மற்றும் முன்கை, மணிக்கட்டுகளில் அதிக வலி ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க ஆர்தோபெடிக் அகாடமி இதை மொபைல் எல்போ பிரச்சினை என்று வரையறுக்கிறது. இது அடுத்தகட்டமாக ‘கார்பெல் டன்னல் சிண்ட்ரோம்’ எனப்படும் நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். தட்டச்சு செய்வதை குறைத்துக்கொண்டு குரல் ‘மெஸேஜ்’ அனுப்புவதன் மூலம் விரல்களுக்கான வேலையை குறைக்கலாம் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கேமிங் டிஸ்ஸார்டர்

உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்டவர்கள் செல்போன் விளையாட்டுகள் மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகளில் மூழ்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ‘கேமிங் டிஸ்ஸார்டர்’ எனும் தீவிர விளையாட்டு ஆர்வத்துக்கு உள்ளானவர்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. தூக்க குறைவு, அலுவலக வேலை மற்றும் பொறுப்புகளில் பிடிப்பின்மை, அன்றாட வாழ்க்கையில் சலிப்பு கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகிறார்கள். பிளேஸ்டேசன் மற்றும் கன்சோல், வீ.ஆர். போன்ற விளையாட்டு கருவிகளுடன் வீடியோ கேம் விளையாடுபவர்கள் எளிதில் பாதிக்கப்படு கிறார்கள் என்று தெரியவருகிறது. அவர்கள் விரைவில் சோர்வடைந்துவிடுகிறார்கள். கண்கள், மூட்டுகளில் பாதிப்பு ஏற்படுகிறது.



விளையாட்டுகளால் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் அதிகமான பாதிப்புக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இத்தகைய பாதிப்புகளுக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகரித்து உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் 13 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

செல்பிடிஸ்

இன்று செல்பி மோகம் அதிகமாக உள்ளது. இது பற்றி ஆய்வு மேற்கொண்ட நாட்டிங்கம் டிரென்ட் யுனிவர்சிட்டி ஆய்வாளர்கள், சிலரால் செல்பி எடுக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தவே முடிவதில்லை என்றும், சிலர் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 6 செல்பிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள் என்றும் மதிப்பிட்டு உள்ளனர். பலருக்கு தினசரி ஒரு செல்பி படமாவது சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என்னும் மனநிலைக்கு மாறி உள்ளனர். அதற்கு கிடைக்கும் ஆதரவுதான் அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை வளர்ப்பதாக நம்புகிறார்கள். இல்லாவிட்டால் அவர்கள் கவலையில் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய தீவிர செல்பி மனப்போக்கை நிபுணர்கள், ‘செல்பிடிஸ்’ பாதிப்பு என்று வரையறுக்கிறார்கள். இங்கிலாந்தில் 2001 அக்டோபர் முதல் 2017 நவம்பர் வரையான காலத்தில் 259 பேர் செல்பி எடுக்கும்போது நடந்த விபத்துகளில் இறந்துள்ளனர் என்றும் அவர்களது புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.

டெக்ஸ்ட் நெக்



கணினி, செல்போன்களில் பணி நிமித்தமாகவும், வீடியோக்கள், விளையாட்டுகள், சமூக வலைத்தளங்களை ரசிக்கவும் அளவுக்கு அதிகமாக தலையை சாய்த்து வைப்பது கழுத்து தசை பாதிப்புக்கு காரணமாகிறது. அப்போது கழுத்தில் 60 பவுண்ட் அழுத்தம் ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது. இது கழுத்து தசைகளில் பிடிப்பு, வலி ஏற்பட காரணமாகிறது. இந்த பாதிப்பு ‘டெக்ஸ்ட் நெக்’ என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. கண்களுக்கு நேரான அல்லது சற்று கீழிறங்கிய நிலையில் திரைகளை வைத்து பணி செய்வதும், பார்வையிடுவதும் கழுத்து பாதிப்புகள், கண் பாதிப்புகளை குறைக்கும் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நோமோபோபியா

பயணங்களாலோ அல்லது வேலைச் சூழலாலோ ஒருவருக்கு சிறிது நேரம் செல்போனை பயன் படுத்த முடியாத சூழலை உருவாக்கினால் அவர் மனக்கலக்கத்திற்கு உள்ளாவதை பார்க்கலாம். இந்த பாதிப்பை ‘நோமோபோபியா’ என்று வரையறுக்கிறார்கள். இந்த வார்த்தை புதிதாக கேம்பிரிட்ஜ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தீவிர மனப்போக்கு மன அழுத்தத்தையும், பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

53 சதவீத செல்போன் பயன்பாட்டாளர்கள், சிறிது நேர செல்போன் பயன்பாட்டு குறைவு சூழலுக்கும், அதிக கலக்கம் அடைவதாக தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு வழக்கமாக சமூக வலைத்தளத்தில் செலவிடும் நேரத்தை 10 நிமிடங்கள் குறைத்தாலே இதன் அறிகுறிகளில் சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கணித்துள்ளனர்.



கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்

கணினிகள், செல்போன் திரைகளை மணிக்கணக்கில் பார்வையிடும் இன்றைய பழக்க வழக்கத்தால் கண்களில் ஏற்படும் பாதிப்பு இப்படி அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தினசரி சராசரியாக 3 மணி நேரத்திற்கு அதிகமாக எலக்ட்ரானிக் திரைகளை பார்த்துக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் கண்கள் உலர்வடைதல், கண் வலி மற்றும் பார்வைச் சிதைவு ஏற்படுவதாகவும் கணிக்கப்படுகிறது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ள அவர்கள் 20-20-20-20 என்ற மருத்துவ முறையை பின்பற்ற அறிவுறுத்துகிறார்கள். அதாவது 20 நிமிடத்திற்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள பொருளைப் பார்த்து, 20 முறை, குறைந்தபட்சம் 20 விநாடிகள் கண்சிமிட்ட வேண்டும் என்பதுதான் அந்த கண் நலன் பாதுகாப்பு முறையாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker