சமையல் குறிப்புகள்
நாவில் சுவை கூட்டும் மீன் பிரியாணி
பொதுவாக பிரியாணி அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. இதில் பல வகைகள் உண்டு. அதில் மீன் பிரியாணியும் ஒன்று. அதை செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்
- பாஸ்மதி அரிசி – 3/4 கிலோ
- மீன் – 3/4 கிலோ (பெரிய வகை துண்டு மீன்)
- வெங்காயம் – 3
- தக்காளி – 3
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி, பூண்டு விழுது – 3 மேசைக்கரண்டி
- பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை – தலா 2
- தயிர் – ஒன்றரை கப்
- மிளகாய் தூள் – 2+1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 + 1/2 தேக்கரண்டி
- வெள்ளை மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
- சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
- சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
- கெட்டி தேங்காய் பால் – ஒரு கப்
- எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
- எண்ணெய் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக் கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்த மசாலாவில் பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மசாலாவில் பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுக்க வேண்டும்.
- அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்க வேண்டும்.
- பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
- அதனுடன் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
- பின் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விட வேண்டும்.
- பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும்.
- பின் அரிசியை களைந்து போட்டு, மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேக வைத்ததும் நன்கு கிளறிவிட்டு, தனியாக எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு இறக்கினால் கமகமக்கும் மீன் பிரியாணி ரெடி.