உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்களுக்கான டயட் டிப்ஸ்
“மாடலிங் பெண்களைப் போல, “ஸ்லிம்’மாகவும், “ட்ரிம்’மாகவும் இருக்க, நான் என்ன செய்யணும்…’ என்று நிறைய, “டீன் ஏஜ்’ பெண்கள், அழகுக் கலைஞர்களிடம் ஆலோசனை கேட்கின்றனர். அவர்களது முதல் தேவை, தன் உடலை மெலிய வைக்க வேண்டும் என்பது தான். “உடல் எடையை குறைக்க, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்…’ என்று, சில “டீன் ஏஜ்’ பெண்கள், வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
அதிக எடை உள்ளவர்கள், கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பதால், நீரிழிவு, மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாது. மேலும், மாடலிங் பெண்களை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது நிச்சயம். உயரத்துக்கு பொருத்தம் இல்லாத அளவுக்கு, உடல் எடை அதிகரித்தால் மட்டுமே, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கு முன், டாக்டரை சந்தித்து, உடல் குண்டாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டும். நிபுணத்துவம் பெற்ற ஒருவரது ஆலோசனையின் பேரில், உணவுக் கட்டுப்பாட்டை துவக்க வேண்டும்.
ஒருவரது உடல் குண்டாக இருக்கிறது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும். இதனை, உணவுக் கட்டுபாடு மூலம் நிவர்த்தி செய்யலாம். ஆனால், பரம்பரை ரீதியாக உடல் குண்டாக இருப்பவர்கள், மெலிவது எளிதான காரியம் அல்ல. தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பிகளில், நோய் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான உடல்வாகு பெற வேண்டும் என்று, உணவின் பெரும் பகுதியை வெட்டி, குறைத்து விடக் கூடாது.
அதுபோல, திடீரென்று உடலை அதிகமாக வருத்தும் உடற்பயிற்சியை துவங்கி விடக்கூடாது. மிதமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதாலும், கலோரி குறைந்த உணவை சாப்பிடுவதாலும், உடல் எடையை குறைய வைக்கலாம். மூன்று வேளை ஆகாரத்தை என்ன காரணம் கொண்டும் குறைத்து விடக் கூடாது. சத்து நிறைந்த உணவு, காலை நேரத்துக்கு மிகவும் தேவை.
உணவுக் கட்டுப்பாடு என்றாலே, முழுமையாக உணவை தவிர்ப்பது என்று அர்த்தமல்ல. அதனால், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம். அதே நேரம் பால், மீன், முட்டை போன்றவைகளை உணவில் சேர்க்காதவர்கள், விட்டமின், தாது சத்துகள் நிறைந்த காய்கறி, பழ வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சாப்பிடும் உணவு, சமச்சீர் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பது அவசியம். கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், விட்டமின், மினரல் சத்துகள், போதுமான அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாலட், பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். பழங்களை ஜூஸ் ஆக்காமல், அப்படியே சாப்பிட்டால், நார்ச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.
மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர், சாப்பிடுவதற்கு முன், சாலட் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் தன்மை அதிகமுள்ள சாலட்டை, முதலிலேயே சாப்பிட்டால், வயிறு சீக்கிரமாக நிறையும்.
இதனால், அதிகமான அளவு சாதம் சாப்பிட முடியாது. பாஸ்ட் புட் உணவுகள், குளிர்பானங்கள், இனிப்புகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, சரியான நேரத்திற்கு, சரியான உணவுகளை சரியான முறையில் சாப்பிட வேண்டும்.