மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட்… இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன..? அறிகுறிகள் எப்படி இருக்கும்..?
மாரடைப்பு, அதாவது ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட், இரண்டும் ஒன்றுதான் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறு என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்…
மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட், இதய தமனி நோய் என இதய நோய்களில் பல வகை உள்ளது. உலகம் முழுவதும் பலர் இறப்பதற்கு இதய நோய் முககிய காரணமாக இருக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல வகையான இதய நோய்களை வராமல் தடுக்கலாம். நம் வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலமாகவோ அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாகவோ கூட பலரும் இதய நோயிலிருந்து மீண்டு இன்று நலமாக வாழ்ந்து வருகிறார்கள். மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்டை ஒன்று என பலரும் குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டும் உயிரைப் பறிக்க கூடிய நோய்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனாலும் இவை வருவதற்கான காரணங்கள், வழிமுறைகள், உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றில் வித்தியாசம் உள்ளது.
மாரடைப்பு
இதயத்திசுக்கள் இறப்பதையே மாரடைப்பு என அழைக்கிறார்கள். இதய தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் காரணமாகவே ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது. இந்த அடைப்பு எதனால் ஏற்படுகிறது? ரத்தம் உறைந்து நாளடைவில் அவை வளர்ந்து இதயத்திற்கு எடுத்துச் செல்லும் ரத்தத்தை தடுக்கும் அளவிற்கு அடைப்பை உண்டாக்குகிறது. போதுமான ரத்தம் செல்லாததன் காரணமாக இதய தசையின் செல்கள் இறக்க நேரிடுகிறது.
இதய நோய் வருவதற்கு பல அறிகுறிகள் இருந்தாலும் நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், அதிகமாக வியர்த்தல், தலை சுற்றல், கை, கழுத்து, தோள், பின்புறத்தில் வலி போன்றவை பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள் ஆகும். மாரடைப்பு வந்தால் நாம் உடனடியாக மருத்துவமணைக்குச் செல்ல வேண்டும். இது மிகவும் முக்கியம். ஏனென்றால் இதய தசைக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, மீண்டும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ரத்தம் உடனடியாகச் செல்ல வேண்டும்.
கார்டியாக் அரெஸ்ட்
இன்னொரு புறம், திடீரென்று இதயம் செயல்படுவது நின்று போவதையே கார்டியாக் அரெஸ்ட் என்கிறோம். இதயத்தின் எலக்டிரிக்கல் பல்ஸ் சரியாக செயல்படாததன் விளைவாக இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) அல்லது இதயத் துடிப்பின்மை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் இதயத்துடிப்பு வேகமாவதோடு ஒழுங்கற்ற முறையில் இருக்கிறது. இதனால் உடல் முழுவதும் போதுமான ரத்தத்தை எடுத்துச் செல்ல இதயம் தடுமாறுகிறது.
கார்டியாக் அரெஸ்டின் போது பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள்:
உணர்வுகள் இல்லாமல் போவது, சுவாசம் நின்று போவது, இதயத்துடிப்பு நிற்பது போன்றவை ஆகும். இத்தகைய சமயத்தில் மீண்டும் இதயத்துடிப்பையும் ரத்த ஓட்டத்தையும் மீட்டு கொண்டு வர உடனடியான மருத்துவ கவனம் தேவை. இதுபோன்ற சமயத்தில் செய்யப்படும் சிபிஆர் சிகிச்சை உயிரை மீட்டெடுக்கக் கூடியது.
முக்கியமான ஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது. மாரடைப்பு ஏற்பட்டால் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஏனென்றால் இதய தசைகள் காயம்பட்டிருப்பதால், அவை முறையற்ற இதய துடிப்புகளுக்கு காரணமாக இருக்கும். ஆனால் கார்டியாக் அரெஸ்ட் இதயநோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென்று வரக்கூடும். வழக்கமாக இது முறையற்ற எலக்டிரிக்கல் பல்ஸ் அல்லது மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அல்லது மோசமான விபத்து, தண்ணீரில் மூழ்கும் போதோ வரக்கூடும்.
முறையற்ற இதயத்துடிப்பு காரணமாக இதயம் செயல்படுவது திடீரென்று நின்று போவதே கார்டியாக் அரெஸ்ட். அதேசமயம், கரோனரி ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத்துக்குச் செல்ல வேண்டிய ரத்தம் நின்று போவதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இரண்டிற்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். எனினும் இவை இரண்டிற்குமான காரணங்களும் வழிமுறைகளும் வேறு வேறானவை.