உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய் சட்னி… இதோ உங்களுக்கான ரெசிபி!
வெள்ளரிக்காய் மருத்துவ குணம் நிறைந்த காய். இது மற்ற காலங்களை விட கோடை காலத்தில் அனைவரும் அதிகம் உட்கொள்ளப்படும். ஏனென்றால், இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும். செரிமானத்தை தூண்டும் பண்பு இதற்கு உண்டு. எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
இதில், சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்ற தாதுப்பொருட்கள் உள்ளது. அந்தவகையில், இட்லி, தோசைக்கு ஏற்ற ஒரு சட்னியை வெள்ளரிக்காய் வைத்து எப்படி செய்வது என இத தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – 2.
கடலை பருப்பு – 2 ஸ்பூன்.
பச்சை மிளகாய் – 3.
புளி – சிறு நெல்லிக்காய் அளவு.
தேங்காய் – ½ மூடி.
வெல்லம் – 1 ஸ்பூன்.
கடுகு – ½ ஸ்பூன்.
சீரகம் – ½ ஸ்பூன்.
கறிவேப்பிலை – 1 கொத்து.
பெருங்காயம் – 1 சிட்டிகை.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். இதை தொடர்ந்து, எடுத்துக்கொண்ட தேங்காயினை துருவி தயார் நிலையில் வைக்கவும்.
இப்போது, சட்னி செய்ய எடுத்து வைத்துள்ள வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து பின் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பின்னர், மிக்ஸி ஜார் ஒன்றில் நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கடலை பருப்பு, புளி, தேங்காய் துருவல், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து நன்கு அரைத்து தனியே ஒரு பாத்தில் எடுத்து வைக்கவும்.
தற்போது, சட்னியை தாளிக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் இதில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னி பாத்திரத்தில் ஊற்றினால் வெள்ளரிக்காய் சட்னி தயார்.
இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.