எடிட்டர் சாய்ஸ்

தீய பழக்கத்தை கைவிடுவது எப்படி?

“தலைக்கு மேல் பிரச்சினைகள் அழுத்தும் போது வேறு வழியில்லாமல் தான் இந்த பழக்கத்திற்கு ஆளாகினேன். பிரச்சினைகள் தீர்ந்த உடனே இதை நான் விட்டு விடப் போகிறேன்”. வீட்டில் அனுமதிக்காத, அது வரை தவறென்று கருதிய, சில வேண்டாத பழக்க வழக்கங்களுக்கு ஆளாகும் பலரும் சொல்லக்கூடிய அல்லது அப்படி நம்பக் கூடிய ஒன்று இது.

பல நேரம் தன் மனதை பாதிக்கக் கூடிய ஏதாவது ஒன்று ஒருவன் வாழ்க்கையில் நடக்கும் போது, தன் உடலை பாதிக்கக் கூடிய தீய பழக்கங்களுக்கு அறிந்தோ அறியாமலோ அவன் ஆளாகி விடுகிறான். வேலைப் பழு அதிகமாக இருக்கிறது. குடும்ப பிரச்சினை, சூழல் சரியில்லை, உறவுகளின் துரோகம், பொருளாதார நெருக்கடி, அலுவலக ஸ்ட்ரெஸ் இப்படி ஏதாவது ஒன்று அவனை இழுத்து விட்டு சென்று விடுகிறது.

ஏற்கனவே, மனரீதியாக சிரமத்தில் இருக்கும் ஒருவரின் உடலும் பலவீனமாக இருக்கும். அந்த சூழலில் சீரான பழக்க வழக்கங்கள் இல்லாமல் தவறான ஒன்றிற்கு ஆளாகும் போது அவன் உடல் நிலை இன்னும் பலவீனமாகி விடும், அது பிரச்சினைகளை மேலும் அதிகப் படுத்துமே தவிர பிரச்சினைகளுக்கு எந்த ஒரு வகையிலும் தீர்வாகாது.உண்மையில், உங்கள் ஆரோக்கியமே உங்கள் முதல் மூலதனம். எந்த பிரச்சினையும் நிரந்தரம் இல்லை, இன்று பெரிய பிரச்சினையாக தெரியக் கூடிய ஒன்று நாளையே இதற்கா இப்படி வருந்தினோம் என்று தோன்றக் கூடும். ஆனால் இன்று ஒரு தீய பழக்கத்திற்கு ஆளாகி விட்டால், அது மூளையின் செயல் திறனோடு hard wired ஆகி, அது இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழலை ஏற்படுத்தி விடும். எந்த பிரச்சினை உங்களுக்கு அதை அறிமுகப்படுத்தியதோ அந்த பிரச்சினையே நீங்கினாலும், நீங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த பழக்கத்தை உங்களால் விட முடியாத அளவு உங்களை அது ஆட்கொண்டு விடும். பின், என் பிரச்சினையினால், நான் அதை செய்தேன் என்று இருந்தது போக, அது இருந்தால் தான் என்னால் பிரச்சினையே இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்ற மாயையை ஏற்படுத்தி உங்களை அதிலிருந்து மீளவே முடியாமல் செய்து விடும்.இப்படி, கவலை, சங்கடம் என ஒரு பலகீனமான நேரத்தில் உங்களுக்குள் எந்த பழக்கவழக்கம் ஏற்பட்டாலும் குழைந்து போன பகுதியில் பதிந்து போன காலடித் தடங்களாக பதிந்து விட, அது அப்படியே பிரிக்க முடியாத வகையில் நிரந்தரமாக தங்கி விடுகிறது. கொஞ்சம் யோசித்து பாருங்கள்.. அப்படி பதியக் கூடிய நேரத்தில் நீங்கள் நல்ல விஷயங்களை உங்களுக்குள் பதிய வைப்பது நல்லதா. தீய விஷயங்களை பதிய வைப்பது நல்லதா?!

ஏதாவது ஸ்ட்ரெஸ் இருக்கும் போது உண்மையில் அதை போக்குவதற்கு உங்களுக்குள் எண்டோபின்ஸ் என்னும் ஹார்மோனை சுரக்க செய்வதே அந்த ஸ்ட்ரெஸ்சுக்கான ஆண்டிபயாடிக்காக இருக்கும். அந்த வகையில் உடற்பயிற்சி, யோகா போன்ற உங்கள் உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக்கும் செயல்களைச் செய்து, உங்களை நீங்களே சுறுசுறுப்பாக மாற்றிக் கொள்ளும் போது உடல் ஸ்ட்ரெச் நீங்கி பலம் அடையும்.

தவிர, என்ன தான் நீங்கள் தீய பழக்கங்களை புதிதாக பழகத் தொடங்கினாலும், உங்கள் சூழலை முன்னிறுத்தி அதை நீங்கள் நியாயப் படுத்த முனைந்தாலும், உங்கள் ஆழ்மனதின் வேல்யு சிஸ்டம் அதை சரியென்று ஏற்றுக் கொள்ள முடியாமல் நிராகரித்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்குள் ஒரு திருப்தியற்ற மனநிலையே இருக்கும். இதுவே நல்ல பழக்கங்கள், நேர்மறை எண்ணங்கள், உங்களுக்குள் ஒரு நிறைவையும், உங்கள் சூழலைக் கையாளக் கூடிய சக்தியையும் தரும்.எதை எதிர்க்கிறீர்களோ அது நிலைத்து விடும். தீய பழக்கங்களும் அப்படித்தான். எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் விட வேண்டுமென்றால், ‘இதை இத்துடன் விட்டு விட வேண்டும்’ என்று நினைத்து அதற்காக போராடும் போது அது இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்து விடும் அதே நேரம், அனிச்சையாய் செய்து கொண்டிருக்கும் அந்த பழக்கத்தை ஒவ்வொரு முறை செய்யும் போதும் புதிதாக செய்வதுபோல் யோசித்து சுய உணர்வுடன், தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற முழு கவனத்தோடு செய்து பாருங்கள். விளைவு உங்களை வியக்க செய்யும்.

அறிவு பூர்வமாக ஒன்றை செய்யும் போது அந்த பழக்கம் நல்லதா? கெட்டதா? என்பதை மனது அனலைஸ் பண்ணும். நல்ல பழக்கமாக இருந்தால் தனக்குள் எடுத்துக் கொள்ளும் மனம், தீயதாக இருந்தால் அந்த எண்ணத்தை frontal cortex க்கு அனுப்ப, அட! எண்ண பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனம் எங்கும் வியாபிக்க, மனம் அந்த பழக்கத்தை வெறுக்கத் தொடங்கும் என்கிறது மனஇயல்

அதாவது ஒன்றை விட வேண்டும் என அதை போர்ஸ் பண்ணுவதை விட்டுவிட்டு, என்ன செய்கிறோம் என அதை போகஸ் பண்ணும் போது அதன் நல்லது கெட்டது சரியாக மனதில் படும். நல்லதை தொடர முடியும். தீயதை விட முடியும்.

துருக்கி தேசத்திற்கு மணமுடித்து வந்த அந்த எகிப்திய பேரழகி ‘மாரா’விற்கு திருமண வாழ்க்கை திருப்தியாக இல்லை. கோபம், ஆற்றாமை, வருத்தம், ஏமாற்றம் என உள்ளுக்குள் புகைய ஆரம்பிக்க அவள் புகைக்க ஆரம்பித்தாள். ஒன்று இரண்டு எனத் தொடங்கிய அந்தப் பழக்கம் விரிந்து முழுமையாக அவளை ஆட்கொள்ள அவள் குழந்தைகளே அவளை வெறுக்கத் தொடங்கினார்கள்.

பிரச்சினையால் தீயபழக்கம், தீயபழக்கத்தால் மீண்டும் பிரச்சினை என vicious circle ஆக அவள் வாழ்க்கை சுற்றி சுழல, அவளுக்குள் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் எழுந்தது. தகுந்த ஆலோசனைக்கு வந்த அவளுக்கு, யாரையோ பழி வாங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து, தன்னையே, தான் பழிவாங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற நிகழ்வு புரிய, நல்ல மாற்றத்திற்கு உடனே தயாரானாள்.சில மாதங்கள் கழித்து அவளை சந்திக்கும் போது, தன்னம்பிக்கையும் நல்ல பழக்க வழக்கங்களுமாக அவள் செதுக்கப் பட்டிருந்தாள். தன்னுடைய மாற்றத்தைப் பற்றி அவள் சொன்னது இது தான். நீங்கள் மனநல ஆலோசனையில் சொன்னது போல் பிரச்சினைக்கு எப்படி பிரச்சினையே தீர்வாகும் என்று யோசித்தேன். நல்ல தீர்வு என்பது நிச்சயம் தீய பழக்கத்தில் இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். நான் மாற வேண்டும் என மனதார நினைத்த பின் மாறுவது எனக்கு சிரமமாக இல்லை. நல்ல பழக்கங்களுக்கு இடம் கொடுத்தேன் தீயவைகள் தானே விடை பெற்று சென்று விட்டது என்று சொன்ன அவள் தன் அனுபவத்தையே மூலதனமாகக் கொண்டு, இன்று பலரின் மாற்றத்திற்கும் ஊன்று கோலாக இருக்கிறாள். அவள் கண்கள் மகிழ்ச்சியில் மின்னிக் கொண்டிருந்தது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker