பலவகையான கவுன்களின் அணிவகுப்பு
கவுன்களில் முக்கியமான வகைகள் என்றால் அவை ஏ-லைன், மாற்றம் பெற்ற ஏ-லைன், பால் (பந்து) கவுன்கள், ஷியத் (உறை போன்ற) கவுன்கள், எம்பயர் வெயிஸ்ட் கவுன்கள், மெர்மெயிட் மற்றும் ட்ரம்பட் கவுன்களாகும்.
ஏ-லைன் கவுன்கள்
ஆங்கில எழுத்தான A வடிவத்தில் இவ்வகை கவுன்கள் இருப்பதாலேயே இப்பெயரைப் பெற்றன. இவ்வகைக் கவுன்கள் நேர்த்தியானதாகவும், எளிமையானதா கவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து உடல்வாகு உடையவர்களுக்கும் பொருந்தக்கூடிய தாக உள்ளது.
இவை இடுப்பு வரை சிக்கெனப் பிடித்தது போலும் அதன் பிறகு கால்கள் வரை ஆங்கில எழுத்து A வடிவத்தில் உள்ளது. சிறிய விருந்துகள், துணைப் பெண்ணாக இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்ள சரியான தேர்வாக இவை இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சமீபத்திய கவுன் பாணிகளில் பெரும்பாலான பெண்களால் விரும்பி அணியக் கூடியவையாக இவை உள்ளது.
மாற்றம் பெற்ற ஏ-லைன் கவுன்கள்
ஏ-லைன் கவுன்களில் மாற்றம் பெற்று வந்திருப்பவை இவை. இந்த கவுன்களில் ரவிக்கை பகுதி, இடுப்பிற்குக் கீழேயும் சிக்கென நம் உடலைப் பிடித்து அதன் கீழே மெல்ல ஏ – வடிவத்தைக் கொண்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ஏ – வடிவ கவுன்கள் பாரம்பரிய ஏ-வடிவ கவுன்களைவிட உடலுடன் நெருக்கமாகப் பொருந்துகிறது. மெல்லிய இடுப்பு, சிறிது தொப்பை என எப்படிப்பட்ட உடல்வாகு உடையவர்களையும் நேர்த்தியாகக் காட்டக்கூடியவை இவ்வகை கவுன்கள்.
பால் (பந்து) கவுன்கள்
சிண்ட்ரெல்லா காலம் தொட்டு இன்றைய நவீனப் பெண்களின் காலம் வரை விருப்பமான ஆடைகளில் இவையும் ஒன்று. இவை மார்பிலிருந்து இடுப்பு வரை ரவிக்கை போல இறுக்கமாகவும், இடுப்பிலிருந்து பந்து போல எழும்பி கால்கள் வரை விரிந்து தரையைத் தொடும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இடுப்பு கனமாக உள்ளவர்கள், வயிறு பெரிதாக உள்ளவர்கள் பருத்த கால்களை உடையவர்கள் இவற்றை அணியும்போது நம் உடலை மறைத்து ஒரு அழகான தோற்றத்தைத் தரும்.
உயரம் குறைவான பெண்கள் குறைந்த அளவு கொண்ட பந்து கவுன்களைத் தேர்ந்தெடுக்கலாம். மிகவும் உன்னதமான வண்ணங்களில், பணக்காரத் தோற்றத்தைத் தரும் துணிகளில் இவ்வகை கவுன்கள் மிகவும் ஆளுமையைத் தருபவையாக உள்ளன. இரவு நேர விருந்துகளுக்கு அணிய ஏற்ற தேர்வு இவை. பால் பங்ஷன், நிச்சயதார்த்தம் போன்ற விழாக்களில் அனைவரின் பார்வையும் உங்கள் மீதே இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்? அப்பொழுது தயங்காமல் இவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
ஷியத் கவுன்கள்
இவை மேலிருந்து கீழ் வரை நேரான பாணியுடன் கத்தியின் உறை போன்ற தோற்றத்தைத் தருவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எவ்வித மடிப்புகளோ, ப்ளட்டுகளோ இருக்காது. இதுபோன்ற கவுன்கள் ஓப்பன் ஷோல்டர்களுடனே பெரும்பாலும் வருகின்றன.
பிரபலங்களின் பார்ட்டி கவுன்கள் இவை என்று உறுதியாகச் சொல்லலாம். மெல்லிய தேகம் கொண்டவர்களுக்கு இவை அட்டகாசமாகப் பொருந்தும். இடுப்பில் பட்டைகள் (பெல்ட்) வருவதும் இவ்வகை கவுன்களை மேலும் கவர்ச்சிகரமாகக் காண்பிக்கின்றன.
எம்பயர் – வெயிஸ்ட் கவுன்கள்
இவ்வகை கவுன்கள் மிகவும் நவநாகரீகமானவை மற்றும் அரச தோற்றத்தைக் கொடுப்பவை என்று சொல்லலாம். இவற்றில் மார்பகங்களை இறுக்கிப் பிடித்தும் அதன் கீழிருந்து உயர்ந்த இடுப்புத் தோற்றத்தைத் தருவதாகவும் கவுன்கள் வடிவமைக்கப் பெற்றிருக்கும். இவ்வகை கவுன்கள் தொப்பையை அழகாக மறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கர்ப்பிணிப் பெண்கள் கூட இவ்வகைக் கவுன்களை அணிவதை விருப்புகிறார்கள் என்று சொல்லலாம். உடல் வடிவத்தை மேம்படுத்தவும், எந்தவிதக் குறையும் வெளியில் தெரியாதவாறும் கவுன்களை அணிய விரும்புபவர்கள் இந்த மனம் மயக்கும் கவுன்களை விரும்பி வாங்கலாம்.
மெர்மெயிட் கவுன்கள்
காலம் கடந்த இன்றைய நவநாகரீக உலகில் ஆட்சி செலுத்துவது இவை என்று சொல்லலாம். தேவதை, கடல் கன்னி போன்ற வடிவமைப்புடன் இருக்கும் இவ்வகைக் கவுன்கள் நம் உடல் தோற்றத்தைக் கச்சிதமாகவும், கவர்ச்சிகரமாகவும் கட்டுபவையாகும். இந்தக் கொள்களில் மார்வு, இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகள் சிக்கெனப் பிடித்திருக்க முழங்கால்களில் இருந்து அதிகப் பிளட்டுடன் இருக்கும் பாவாடை போல விரிவடைகின்றது. முதுகில் துணியானது மிகவும் இறங்கி முதுகு மற்றும் இடுப்புகளின் வளைவைக் காட்டும் விதமாக உள்ளது. பெரிய அளவில் நடக்கும் விருந்துகளுக்கு அணிய ஏற்றவை மெர்மெயிட் கவுன்கள்.
ட்ரம்பெட் கவுன்கள்
இவை உடலுடன் ஒட்டி, தொடைப் பகுதியிலிருந்து ப்ளட்டுகள் விரிவடைந்து இசைக்கருவியான ட்ரம்பெட்டை ஞாபகப்படுத்தும் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிக மெலிந்த தேகமுடைய பெண்கள் இவற்றை அணியும்பொழுது ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தருபவையாக இவை இருக்கும். ஷேடின் துணிகளில் செல்ப் பூக்கள் மற்றும் லேசுகளுடன் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகைக் கவுன்களை பிரபலங்கள் விரும்புவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மென்மையான வண்ணங்களில் வரும் இவ்வகைக் கவுன்களை அணிந்தால் அவை இளவரசி போன்ற தோற்றத்தைத் தருவதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.