எடிட்டர் சாய்ஸ்

முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

நிலத்திலும், தங்கத்திலும் மட்டுமே முதலீடு செய்து வந்த நம்மில் பலருக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.

நிலத்திலும், தங்கத்திலும் மட்டுமே முதலீடு செய்து வந்த நம்மில் பலருக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு என்பது இன்றும் ஒரு புதிய முதலீடாகவே உள்ளது. இந்த தருணத்தில் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.

மியூச்சுவல் பண்டுகளில் பொதுவாக 2 வகை உள்ளன. ஒன்று, கடன் பத்திரம் சார்ந்த முதலீடு திட்டங்கள். மற்றொன்று, பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்கள். இவை இரண்டும் கலந்தவை கலப்பின திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உங்கள் முதலீட்டு காலம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். குறைந்தது 5 வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில், குறுகிய காலங்களில் ஏற்ற, இறக்கம் இருப்பது சகஜம்.

ஆகவே, சில மாதங்களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள். அதேபோல, ஓரிரு வருடங்களுக்குள் தேவைப்படும் பணத்தை பிற கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள்.

மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டு கால அளவை குறிப்பாக கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் பண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.

உங்கள் வயது என்ன, நீங்கள் இந்த முதலீட்டிலிருந்து வரும் வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவரா, எந்த தேவைக்காக நீங்கள் இதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் போன்றவற்றை நீங்கள் முதலீடு செய்யப்போகும் முன் கவனிக்க வேண்டியது அவசியம். அடுத்த 6 மாதங்களில் நடக்கவிருக்கும் உங்கள் மகள் அல்லது மகனின் திருமணத்துக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்ய உள்ளீர்கள் எனில், அதற்கேற்றாற் போல் ரிஸ்க் இல்லாத திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

அதேபோல் 25 வருடங்கள் கழித்து வரப்போகும் உங்கள் ஓய்வு காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் எனில், அதற்கேற்றாற்போல் அதிக ரிஸ்க் உள்ள, அதே சமயத்தில் அதிக லாபத்தை தரக்கூடிய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதேபோல்தான் உங்களின் வயதையும் ஒரு முக்கிய அங்கமாக திட்டத்தை தேர்வு செய்வதில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இளம் வயதினர் எனில், தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே, உங்களிடம் தொடர்ந்து பணப்புழக்கம் இருக்கும். உங்கள் தேவையும் பல ஆண்டுகள் கழித்துதான் இருக்கும். ஆகவே, நீங்கள் அதிக ரிஸ்க் உடைய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, உங்கள் அன்றாட வாழ்வுக்கு தேவையான பணத்தை முதலீடு செய்யும்போது மிகவும் குறைவான ரிஸ்க் உடைய திட்டங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆகவே, உங்கள் தேவை மற்றும் வயதை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்முன் கவனியுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker