எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க வழிகள்
தலைமுடியைப் பொறுத்தவரை அது கழுத்தளவோ, இடுப்பளவோ… நீளத்தைவிட அடர்த்தியாக, நுனி வெடிப்பில்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமானது. கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
* சின்ன வயதில் நரை வராமல் இருக்க, உடம்பில் பித்தம் பேலன்ஸாடாக இருக்க வேண்டும். அதற்கு, உங்கள் உடம்பு பித்தம் அதிகம்கொண்டதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லெண்ணெய்யில் கரிசிலாங்கண்ணி சேர்த்துக் காய்ச்சி வைத்துக்கொண்டு, தலையில் தடவி வந்தால் பித்தம் கன்ட்ரோல் ஆகும். இளநரை தள்ளிப்போகும்.
* வறண்ட கூந்தல் உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை கொப்பரைத்தேங்காயைத் துருவி, மையாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். தலையில் சீயக்காயோ அல்லது ஷாம்பூவோ போட்டு அலசிய பிறகு, அரைத்த கொப்பரை விழுதை வேர்க்காலில் ஆரம்பித்து நுனி வரை தடவவும். 10 நிமிடங்கள் ஊறவிட்டு தண்ணீரில் அலசி விடுங்கள். கூந்தலில் எண்ணெய்ப்பசையும் இருக்கும்; அதேநேரம் முகத்தில் எண்ணெய் வழியாது. தலைமுடி வலுவாகவும் இருக்கும்.
* தலைக்குக் குளித்தவுடன், வெகு நேரத்துக்கு தலையில் டவலை கட்டிக்கொண்டே இருக்காதீர்கள். தலையில் நீர் கோர்த்துக்கொள்வதோடு, முடியின் வேர்க்கால்களும் பலவீனமாகும்.
* இரவிலேயே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, காலையில் குளிக்கிற வழக்கத்தை இன்றைக்கு நிறைய இளம்பெண்கள் செய்கிறார்கள். இது முடிக்கு நல்லது என நினைக்கிறார்கள். இது தவறு, உண்மையில் இந்தப் பழக்கம் தலைமுடியை வலுவிழக்கச் செய்து மெதுமெதுவாக கொட்டிப் போகவே செய்யும்.
* ஹென்னா பேக் இன்றைக்கு எல்லாப் பெண்களுமே போடுகிறார்கள். அப்படிப் போடும்போது, நெல்லிகாய்ப்பொடி, செம்பருத்திப்பொடி, வெந்தயப்பொடி, துளசிப்பொடி, வேப்பம்பொடி, லெமன் ஆகியவற்றைச் சேர்த்து போட்டால், ஹென்னாவால் உடம்பு ரொம்பவும் குளிர்ச்சியாவதைத் தடுப்பதோடு தலைமுடிக்கும் நல்லது.