புதியவைமருத்துவம்

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் மண்ணீரல்

நம் உடலில் மண்ணீரல் என்ற ஒரு உறுப்பு உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ‘ஸ்பிளன்‘ என்று கூறுவார்கள். இந்த உறுப்பு ரத்தத்தை வடிகட்டுதல் உள்பட பல முக்கிய பணியை செய்தாலும், இந்த உறுப்பை அகற்றி விட்டாலும் மனிதன் உயிர் வாழலாம். அவ்வாறெனில் இந்த உறுப்பு முக்கியமில்லையா? அல்லது முக்கிய தேவையா? இதனை அகற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது? என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் பொதுநல மருத்துவர் மேரி செலஸ்டினா கூறியதாவது:-

மண்ணீரல்

மண்ணீரல், உடலின் முக்கிய உள்உறுப்பு ஆகும். இதயம், நுரையீரல், மூளை, கல்லீரல் போன்றே மண்ணீரலும் தன் இன்றியமையாத பணியை நாள்தோறும் செய்து வருகிறது. உடலில் இடது நுரையீரலுக்கு கீழும், இரைப்பைக்கு சற்று மேலே மண்ணீரல் அமைந்துள்ளது. ஒரு கைப்பிடியளவு இருக்கும் இந்த மண்ணீரலுக்கு பல தனித்தன்மைகள் உண்டு.

பொதுவாக ரத்த அணுக்களின் வயது சுமார் 120 நாட்கள் ஆகும். அதற்கு மேற்பட்ட, சிதைந்த ரத்த அணுக்களை மண்ணீரல் அழித்து வடிகட்டி விடும். அவ்வாறு சிதைந்த ரத்த அணுக்களை அழித்தவுடன் அதிலிருக்கும் புரோட்டின், இரும்புச்சத்து, பிராண வாயுவை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் ஆகியவற்றை மறு சுழற்சி செய்து மீண்டும் அதை ரத்தத்தில் சேர்க்கும்.

 

 

 

 

நிமோனியா-மூளைக்காய்ச்சல்

அதுமட்டுமின்றி உடலில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் உட்புகுந்தால் அதனை எதிர்த்து போராடும். இதற்காக ரத்தத்தில் வெள்ளை அணுக்களை உருவாக்கும். மொத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.

இத்தகைய நோய் எதிர்க்கும் பணியை மண்ணீரல் செய்யாவிடில் உடலில் எளிதில் நிமோனியா என்ற கிருமி தாக்கி நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அதுமட்டுமின்றி எளிதில் மூளைக்காய்ச்சலும் தாக்கும். இந்த 2 நோயும் எளிதில் தாக்காமல் மண்ணீரல் கவனமாக தன் பணியை ஆற்றி வருகிறது.

ரத்தநாளங்கள்

இத்தகைய சிறப்பு பெற்ற மண்ணீரலில் நிறைய ரத்தநாளங்கள் உள்ளன. அதனால் இங்கு அதிக ரத்தம் தேங்கி இருக்கும். கத்திக்குத்தில் மண்ணீரலில் காயம் பட்டால் அப்போது நிறைய ரத்தம் வெளியேறும். உடனே ரத்தஅழுத்தம் குறையும். அதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்படும்.

இதுதவிர மண்ணீரல் பாதிக்கப்பட்டு நிறைய ரத்தக்கசிவு ஏற்பட்டால் வேறு வழியின்றி அதனை அகற்றுவதும் உண்டு. இதுதவிர விபத்து போன்ற பிற காரணங்களால் மண்ணீரலில் ஊமைக்காயம் ஏற்பட்டாலும் கூட அது பாதிக்கப்பட்டு வீக்கமடையும்.

பாதிப்பு-அறிகுறி

பொதுவாக மலேரியா, டைபாய்டு, காசநோயை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளாலும், ரத்தபுற்றுநோய், ரத்தசோகையாலும் மண்ணீரல் பாதிக்கப்படக்கூடும். அவ்வாறு பாதிக்கப்பட்டவுடன் வீக்கமடைந்து உடலில் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதை நாம் சட்டென்று உணர முடியாது. அப்போது உடலில் அதிக களைப்பு ஏற்படும். சைனஸ் தொந்தரவு, சுவாசப்பாதை மற்றும் காதுகளில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.

உடலில் மண்ணீரல் இருக்கும் இடத்தை குறிக்கும் படம்.

இதுதவிர ஒரு சிலருக்கு அடிவயிற்றில், இடது தோள் பட்டையில் லேசான வலி ஏற்படும். சில சமயங்களில் உடல் முழுவதும் வலி இருக்கும். இது தவிர உடல் எடை குறைதல், மஞ்சள் காமாலை, மூக்கில், வாயில் ரத்தக்கசிவு, மலம் கழிக்கும் போது வயிற்றில் அதிகவலி, பசியின்மை, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இவ்வாறான அறிகுறிகள் ஒரு வாரத்துக்கு மேல் இருந்தால் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தால் அதன் பக்கவிளைவாக மண்ணீரலும் பாதிக்கப்படும். அதன் அறிகுறியாக ரத்தவாந்தி வரும்.

தலசீமியா

மண்ணீரலை பொறுத்தவரை, அது உடலுக்கு தேவையான முக்கிய உறுப்பே தவிர, மண்ணீரல் இருந்தால் தான் உயிர் வாழ முடியும் என்கிற கட்டாயமில்லை. அதனால் மண்ணீரல் இன்றியும் உயிர் வாழலாம். இத்தகைய முக்கிய உறுப்பு இன்றி, அல்லது அகற்றி விடுவதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கிறது. மண்ணீரல் பாதிக்கப்பட்டு விட்டால் எதிர்மறையான வேலைகளை செய்ய ஆரம்பித்து விடும். அப்போது அதனை அகற்றுவதை தவிர வேறு வழியில்லை.

தலசீமியா என்பது ஒரு வகை ரத்தசோகை நோய். இதுதவிர பல வகையான ரத்தசோகை நோய்கள் இருக்கிறது. இதுபோன்ற நோய்க்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தை மண்ணீரல் எதிரியாக பாவித்து, அதிக வேலை செய்து அதில் உள்ள தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள், செல்களை அழிக்கும். அதனால் தலசீமியா போன்ற ரத்தசோகை நோயாளிகளுக்கு மண்ணீரலை அகற்றி விடுவார்கள்.

 

 

 

 

தடுப்பூசிகள்

இவ்வாறு மண்ணீரலை அகற்றிய நோயாளிகளை நிமோனியா கிருமி தொற்று, மூளைக்காய்ச்சல் போன்றவை எளிதில் தாக்ககூடும் என்று முதலில் பார்த்தோம். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க 6 வருடத்துக்கு ஒருமுறை நிமோனியா தடுப்பூசியும், 3 வருடத்துக்கு ஒருமுறை மூளைக்காய்ச்சல் தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் போட வேண்டும். இதனை மருத்துவத்தில் ‘பூஸ்டர் டோஸ்‘ என்கிறார்கள்.

பொதுவாக மண்ணீரலின் நோய்த்தொற்றை கண்டறிய நோயாளிக்கு நிறைய பரிசோதனைகள் செய்ய வேண்டும். அவ்வாறான பரிசோதனையில் நோயை கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை அளித்தால் மண்ணீரல் தானாகவே சரி ஆகிவிடும். ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் மட்டுமே ரத்தசோகை நோய் உருவாகுவதில்லை. அதற்கு பதிலாக மண்ணீரல் பாதிப்பு இருந்தாலும் ரத்தசோகை நோய் வந்து விடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம்

மண்ணீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ, பால், கீரை, காய்கறிகள், ஆரஞ்சு, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், வெள்ளரிக்காய், நாவல்பழம் உண்பதும் நல்லது. இதனால் மண்ணீரலின் செயல்பாடுகள் அதிகரிக்கும். செரிமானம் சிறப்பாகும். நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.

மீன் வகை உணவுகள், சோயாபீன்ஸ் எண்ணெய், பூசணி விதை, முந்திரி போன்றவற்றை உண்பதால் நன்மை கிடைக்கும். இவற்றில் ஒமேகா-3 என்னும் ஒரு வகை கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது. இவை மண்ணீரலின் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். குடைமிளகாயில் வைட்டமின்-சி உள்ளது. இது மண்ணீரலின் வீக்கத்தை குறைக்கும். இஞ்சி, ஆப்பிள், பப்பாளிசாறு, சோம்புநீர் குடிப்பதும் நல்லது. மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மண்ணீரல் பிரச்சினை உள்ளவர்கள் தக்காளியை தவிர்ப்பது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker