வலிப்பு நோயில் இருந்து விடுபடலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகின்றன.
வலிப்பு வந்தவுடன், அவருக்கு சாவியை கொடுப்பதால் எவ்விதமான பயனும் இல்லை. மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகின்றன. வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர்.
வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதன் மூலம் எவ்வித பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும். அதன்பின், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் பல ஆண்டுகள் சாப்பிட வேண்டும்.
இரண்டு மாதமாக வலிப்பு வரவில்லை என்பதால், மருந்து, மாத்திரைகளை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும். அரசு மருத்துவமனைகளில் ஆரம்பத்தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரை வழங்கப்பட்டது.
நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை மாத்திரை வழங்கப்படுகிறது. நோயின் தன்மையை பொருத்து ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாதத்திற்கான மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது. இவற்றை கடைபிடித்தால் சுலபமாக வலிப்பு நோயில் இருந்து விடுபடலாம்.