மழைக்கால மருத்துவக் குறிப்புகள்
மழைக் காலத்தில் வயிற்றுப் போக்கு, பேதி, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, மற்றும் டெங்கு வர வாய்ப்பு உண்டு. எனவே உணவிலும், வாழ்வியலிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை அவசியம். அந்த வகையில் உடலை நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இதோ சில வழி முறைகள்.
* நன்கு காய்ச்சி அருந்திய நீரை மட்டுமே வெதுவெதுப்பான சூட்டோடு பருக வேண்டும்.
* வெதுவெதுப்பான நீரை மட்டும் குளிக்கப் பயன்படுத்துங்கள்
* ஆவியில் வெந்த எளிதில் சீரணிக்க கூடிய இட்லி, இடியாப்பம், சோறு, பிட்டு என்பன சாப்பிடவும். கோதுமைச் சப்பாத்தியும் கொடுக்கலாம்.
* மிளகு தூவிய கிழங்கு மதியம் மட்டும் கொஞ்சமாக எடுக்கலாம். பிற மாவுப்பண்டங்கள் வேண்டாம். மிளகு, பூண்டு, சீரகம் போட்ட ரசம் சோறு நல்லது.
* நோய் எதிர்ப்பாற்றலை உடலில் அதிகரிக்க காரம் தேவைப்படும் இடத்திலெல்லாம் மிளகுத் தூள் பயன்படுத்துங்கள்.
* அன்னாசிப்பூ எனும் star anise-ஐ குருமா போன்ற உணவில் போட்டு சாப்பிடவும். தேநீரில் இலவங்கப் பட்டை , துளசி இலை போட்டு அருந்தலாம்.
* நிலவேம்புக் குடிநீர் வீட்டில் கண்டிப்பாக இருக்கட்டும். இந்த பொடியைப் போட்டு 250 மிலி நீர் விட்டு சூடாக்கி 60 மில்லியாகக் குறுக்கி கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாகப் பருகுங்கள். 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 மிலி கொடுக்கலாம். 3-6 வயதில் 15-30 மிலி கொடுக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு வேண்டாம்.
* வெறும் தரையில் படுக்க வேண்டாம். படுக்கை தலையணை உறையை வெயில் தெரியும் போது வெயிலில் போட்டு எடுங்கள். ஈரமான நாட்களில் ஒவ்வாமைத் தும்மல் வர மிக முக்கிய காரணம் ஈரம் பாய்ந்த துவைக்காத தலையணை உறை என்பதை மறக்கக் கூடாது.
* குழந்தைகளை காது, தலைப்பகுதியை அணைத்த (குரங்கு குல்லா மாதிரி) ஆடை அணிவியுங்கள். இருசக்கர வாகன முன் பகுதியிலோ, சாலையைப் பார்த்த படியோ குழந்தையை உட்கார வைக்காதீர்கள்.
* வயிற்றுப் போக்கை நிறுத்த கறிவேப்பிலை, சித்த மருந்துகளான சுண்டை வற்றல் பொடி, தயிர்சுண்டிச் சூரணம் பயனளிக்கும். கூடவே உடலில் நீர்த்துவம் குறைந்திடாது இருக்க உப்பு, பனைவெல்லம் கலந்த நீர், இள நீர், நீர்த்த மோர், அருந்துங்கள்.
* காய்ச்சல் 2 தினங்களைத் தாண்டி படிப்படியாக அதிகரித்தாலோ, தோலில் சிவந்த படைகள் இருந்தாலோ, மருத்துவரை தாமதிக்காது அணுகுங்கள்.