சரும வறட்சி, தோல் சுருக்கத்தை போக்கும் திராட்சை மசாஜ்
சரும வறட்சி, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி மசாஜ் செய்து வரலாம்.
வெப்பமும், சுற்றுச்சூழல் மாசுபாடும் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சரும வறட்சி, ஈரப்பதம் இழப்பு, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகள் தோன்றும். இந்த பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி மசாஜ் செய்து வரலாம். திராட்சையை பயன்படுத்தி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் விதம் குறித்து பார்ப்போம்.
சரும வறட்சி பிரச்சினைகளுக்குள்ளானவர்கள் திராட்சை பழத்துடன் ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து சரும நலனை காக்கலாம். நான்கைந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை துண்டுகளாக வெட்டி, அதனுடன் சிறிதளவு திராட்சை பழங்களை சேர்த்து கூழாக்கிக்கொள்ள வேண்டும். ஒப்பனை செய்ய பயன்படுத்தும் பிரஸ் மூலம் கூழை முகத்தில் அழுத்தமாக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.
எண்ணெய் பசை கொண்ட சருமத்தினர் திராட்சைப்பழத்துடன் முல்தானி மெட்டியை கலந்து உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலில் திராட்சை பழங்களை கூழாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் முல்தானி மெட்டி, ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து நன்கு பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் சருமம் ஜொலிக்கும்.
தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தக்காளியும், திராட்சையும் துணைபுரியும். அகலமான கிண்ணத்தில் ஒரு தக்காளி பழம் மற்றும் 10 திராட்சை பழங்களை போட்டு நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். பிரஸ் மூலம் கருவளையங்கள் உள்ள பகுதியில் கலவையை அழுத்தமாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இந்த மசாஜ் செய்து வரலாம். சருமம் பளிச்சென்று காட்சி தரும்.