அரிசி கஞ்சியின் அற்புத பலன்கள்
அரிசி கஞ்சியின் உடல் நலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த கஞ்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.
சாதம் வடித்த கஞ்சியை வேண்டாத பொருளாக நினைத்து கொட்டுவதுதான் நிறைய பேரின் வழக்கம். அதில் உடல் நலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த கஞ்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.
* அரிசி கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னும். குளித்து முடித்தவுடன் கஞ்சியை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். தலையை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இது உதவும்.
* ஒரு டம்ளர் அரிசி கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். அரிசி கஞ்சியுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரண சக்தி பெருகும்.
* கால்வலியால் அவதிப்படுபவர்கள் அரிசி கஞ்சி யுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைக்கலாம். கால் வீக்கத்தை குறைக்கும் வலி நிவாரணி இது.
* துணிகளுக்கு கஞ்சி போடவும் பயன்படுத்தலாம். துணிகளை துவைத்ததும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு டம்ளர் கஞ்சியை கலந்து துணிகளை முக்கி எடுத்தால் பளபளப்பாக மின்னும். அதனை ‘அயர்ன்’ செய்தால் அழகாக காட்சியளிக்கும். துணிகளின் நிறம் மங்காமல் இருக்கவும் உதவும்.
* அரிசி கஞ்சியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம். அவர்களின் உடல் வளர்ச்சிக்கு அது நலம் சேர்க்கும்.
* இந்த கஞ்சி வயிற்றுப்போக்கில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. அதனுடன் மோர் கலந்து சாப்பிடலாம். உடலில் நீர் இழப்பை ஈடுகட்ட பேருதவி புரியும்.
* இப்போதெல்லாம் சாப்பிடுவதற்கு முன்பு பசியை தூண்டுவதற்கு பழச்சாறுகள் அருந்துகிறார்கள். அரிசி கஞ்சியும் பசியை தூண்டும் பானம்தான். அதனுடன் சிறிது சீரகம் கலந்து குடித்தால் பசியை தூண்டும். சாப்பிட்ட உணவும் எளிதில் செரிமானமாகும்.
* அரிசி கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இதனை பயன்படுத்தி ரசம் வைத்து சாப்பிடலாம். காய்கறிகள், பருப்புகளை அதில் வேகவும் வைக்கலாம். இட்லி மாவை அரைக்கும்போது இதனை கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
*அரிசி கஞ்சியை முகத்துக்கும் உபயோகிக்கலாம். காட்டன் துணியை கஞ்சியில் முக்கி முகத்தில் தடவி, உலர்ந்ததும் கழுவி வரலாம். தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
* அரிசி கஞ்சியுடன் திராட்சை பழங்களை சேர்த்து அரைத்தும் முகத்தில் தடவி வரலாம். முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி பளிச்சென்று மிளிர வைக்கும்.
* சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. ஒரு காட்டன் துணியில் கஞ்சியை நனைத்து சிரங்கு உள்ள இடங்களில் கட்டி வரலாம். தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் ரணம் ஆறிவிடும். அதில் உள்ளடங்கியிருக்கும் ஸ்டார்ச் ரணங்களை குணமாக்கும் தன்மை கொண்டது.
* தீக்காயம் ஏற்பட்டாலும் அரிசி கஞ்சியை பயன் படுத்தலாம். காயம் ஆறுவதோடு, குளிர்ச்சியாகவும் இருக்கும்.
* சூரிய கதிர்களின் ஆதிக்கத்தில் வெளிப்படும் புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தவும் அரிசி கஞ்சி உதவும். வெளியில் செல்லும் முன்பாக கஞ்சியை கொஞ்சம் உடலில் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவியபிறகு புறப்பட்டு செல்லலாம். அப்படி செய்துவந்தால் வெயிலால் சருமத்திற்கு பாதிப்பு எதுவும் நேராது. இது ரசாயன கலப்பில்லாத இயற்கை ‘சன் ஸ்கிரீனாக’ செயல்படுகிறது.
* தோலில் ஏற்படும் சுருக்கங்களை இது நீக்கும். நெற்றி, கழுத்து, கை, முகம் போன்ற இடங்களில் தேய்த்து வருவதன் மூலம் வயதான தோற்றத்தை தவிர்க்கலாம்.
* வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வடித்த கஞ்சியில் வெந்தயத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.
* வேர்க்குரு பிரச்சினைக்கும் இது நிவாரணம் தரும். தொடர்ந்து சில நாட்கள் வேர்க்குரு மீது தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.