உடற்பயிற்சி தரும் நன்மைகள் ஏராளம்
‘உடற்பயிற்சி’ என்ற வார்த்தை இன்று உணவின் முக்கியத்துவத்தினை விட அதிகமாக பேசப்படுகின்றது. அந்த அளவுக்கு நாம் அசையாது கம்ப்யூட்டர் முன்பும், டி.வி.முன்பும், செல்போன் உள்ளேயே அமர்ந்து கொண்டு வாழ்கின்றோம்.
உடற்பயிற்சி என்பது தசைகளில் நல்ல அசைவினை ஏற்படுத்தி உடலின் கலோரி சக்தியினை எரிக்கின்றது. இந்த உடற்பயிற்சி தரும் நன்மைகள் ஏராளம்.
நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் என பயிற்சி பல பிரிவுபடுகின்றது. இவைகளில் ஏதேனும் ஒன்றினையோ அல்லது விருப்பப்பட்ட முறையிலோ தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் பெறக்கூடிய சில நன்மைகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.
* உடற்பயிற்சி உங்களை மன மகிழ்வுடன் வைக்கும். மன உளைச்சல் குறையும்.
* நிச்சயமாக எடை குறையும். உடல், சக்தியினை மூன்று விதத்தில் பயன்படுத்துகின்றது. உணவு செரிமானம், உடற்பயிற்சி, உடலின் செயல்பாட்டு வேலைகள் (இருதய துடிப்பு, மூச்சு விடுதல்..) ஆகிய விதத்தில் உடலின் சக்தி செலவாகின்றது.
* அதிக உணவு கட்டுப்பாடு செய்யும் பொழுது உடலின் செயல்பாட்டுத் திறன் குறைவதால் எடை குறைவது தாமதப்படுகின்றது. உடற்பயிற்சி உடலின் செயல்பாட்டுத் திறனை கூட்டுவதால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் எடையும் சீராக இருக்கும்.
* உடற்பயிற்சி கொழுப்பினை எரித்து தசைகளை உறுதிப்படுத்துகின்றன.
* உடற்பயிற்சி தசைகளுக்கும், எலும்புகளுக்கும் சிறந்தது.
* வயது கூடும்போது தசைகள் பலவீனம் அடைகின்றன. இதனால் இயலாமை கூடுகின்றது. உடற்பயிற்சி தசைகளின் வலியினை சீராய் வைக்கின்றது.
* சற்று விறு விறுப்பான பயிற்சிகள் ஜிம், ஓட்டப்பயிற்சி, கூடைப்பந்து போன்றவை எலும்புகளின் அடர்த்தியினை பாதுகாக்க வல்லவை.
* உடற்பயிற்சி உடலின் சக்தியினை கூட்டுகின்றது. அடிக்கடி உடல் ஆரோக்கியம் இருந்தும் சோர்வாக இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும். நல்ல சக்தியுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பர்.
* உடற்பயிற்சி பல நீண்ட கால நோய்களை தவிர்க்க வல்லது.
* உடற்பயிற்சி சிறந்த ரத்த ஓட்டத்தினை ஏற்படுத்துவதால் சருமத்தில் முதுமை தோற்றத்தினை தவிர்க்கும்.
* உடற்பயிற்சி மூளை ஆரோக்கியம், ஞாபகத்திறன் இவற்றினை சிறப்பாக இருக்க செய்யும்.
* உடற்பயிற்சி நல்ல தூக்கத்தினை அளிக்கும். உடற்பயிற்சியின்பொழுது கூடும் உடலின் உஷ்ணம் தூக்கத்தின் தரத்தினை உயர்த்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* உடற்பயிற்சி உடல் வலியினை குறைக்கும்.
* இப்படி விடாது சொல்லப்படும் அதன் நன்மைகளால் உடற்பயிற்சியினை முறையாக செய்வோமாக.