தோசைக்கு அருமையான மட்டன் தொக்கு
தேவையான பொருட்கள் :
மட்டன் – அரை கிலோ
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்)
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – ஒன்று
சோம்பு – அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெரிய வெங்காயம் – அலங்கரிக்கத் தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
செய்முறை :
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்து தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். 5 விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.
கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும்.
கலவையில் தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.