மணத்தக்காளி கீரையில் இவ்வளவு பலனா?
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சில உணவுகளை நாம் விரும்புவது இல்லை. அதில் முக்கியமாக இந்த கீரை வகைகள். ஆனால் அதில் தான் பல வகையான சத்தான பொருட்கள் உள்ளன. எனவே நாம் சிறுவர் முதல் அனைவரும் எமது உணவு பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அது போல் ஒரு ஆரோக்கியமான உணவு வகை தான் மணத்தக்காளி. மணத்தக்காளி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். மூலநோய்க்கும் குடல் பிரச்சினைக்கும் மணத்தக்காளி கீரை நல்ல மருந்தாக அமையும்.
மேலும் நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக்கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளது.
அதிகம் தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் உதவிபுரியும்.
இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று அதன் இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்த அதிக பலன் தரும்.
இந்த கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். இப்பழம் நன்கு பசி எடுக்க உதவுகிறது. மேலும் புதுமணத் தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள மணத்தக்காளி உதவுகிறது. இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்வதோடு, உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் உதவுகிறது. காயங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.
உடலில் வலி உள்ள இடங்களிலும் வலி நீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மேலும் மணத்தக்காளியை வற்றல் போடலாம் . இயற்கை உணவுகள் எமது உடலில் நன்மைகள் பல சேர்க்கும்.