அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஃபிஷ் ஸ்பா
ஸ்பா சென்டரில் தொட்டிக்குள் வளர்க்கப்படும் ஒரு வகையான மீனைக் கொண்டு உடலின் சில பாகங்களைக் கடிக்க விடுவதுதான் ஃபிஷ் ஸ்பா.
ஸ்பா சென்டரில் தொட்டிக்குள் வளர்க்கப்படும் ஒரு வகையான மீனைக் கொண்டு உடலின் சில பாகங்களைக் கடிக்க விடுவதுதான் ஃபிஷ் ஸ்பா. ஃபிஷ் ஸ்பா ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. துருக்கியில் 100 ஆண்டுகளுக்கு முன்பே சொரியாஸிஸ், எக்சீமா போன்ற தோல் நோய்களுக்கு மீன்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதுதான் பின்னர் ஃபிஷ் ஸ்பா என அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையானது.
எல்லா வகையான மீன்களையும் இச்சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாது. காரா ரூஃபா வகை மீன்களைத்தான் இதற்கு பயன்படுத்துகிறோம். சுத்தமான, வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகளில் டஜன் கணக்கான காரா ரூஃபா மீன்கள் இருக்கும். அந்த நீருக்குள் காலை வைத்ததுமே, இம்மீன்கள் காலில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை சாப்பிட ஆரம்பித்துவிடும். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் எல்லாம் நீங்கி பாதம் புதுப்பொலிவு பெறும்.
ஃபிஷ் ஸ்பாவிலும் சில வகைகள் உண்டு. பாதங்களுக்கு மட்டும் மேற்கொள்ளப்படுவது ஃபிஷ் பெடிக்யூர் என்று சொல்வோம். முகத்துக்கும் ஃபிஷ் ஸ்பா மேற்கொள்ளலாம். அதனை ஃபிஷ் ஃபேஷியல் என்போம். ஃபிஷ் ஃபேஷியல் செய்யும்போது முகப்பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அவை தின்றுவிடுவதால் பருக்கள், பருக்களினால் வரும் அடையாளங்களை போக்க முடியும். மேலும், வயதான தோற்றத்தைத் தரும் முகச்சுருக்கங்கள் இதனால் நீங்குகிறது. முகத்துக்கு பொலிவான தோற்றத்தை ஃபிஷ் ஃபேஷியல் தருகிறது.
இந்த ஃபிஷ் ஸ்பா முறை மசாஜ் செய்வது போல் இருப்பதால் கால்களில் ஏற்படும் சோர்வு, அசதிகளையும் போக்கும். ஃபிஷ் ஸ்பாவினால் உடலளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சியை உணர முடியும். ஃபிஷ் ஸ்பா குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது.