சர்க்கரை நோய் – சில குறிப்புகள்
அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக அவர் வாரிசு தனக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதனை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக அவர் வாரிசு தனக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதனை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இருவருக்கும் பாதிப்பு இருந்தால் வாரிசுகளுக்குக் கூடுதல் கவனம் தேவை. இதனை அனைத்து மருத்துவர்களும் அதிகம் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சமுதாயமும் நன்கு கவனத்துடன் இருக்கின்றனர்.
பொதுவில் இன்றைய கால கட்டத்தில் பலரும் சர்க்கரை நோய் பாதிப்பிற்குள்ளாவதால் இளைஞர்களும் அவ்வப்போது சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அநேக இளைஞர்களுக்கு சர்க்கரையின் அளவு சற்று கூடுதலாகவே இருக்கின்றது. சிலருக்கு ஒரு நேரம் அளவாகவும், ஒரு நேரம் கூடுதலாகவும் இருக்கின்றது. உடற்பயிற்சி மட்டுமே உதவாது. நாம் உண்ணும் உணவினை முறையாக வைத்துக் கொண்டால் மட்டுமே நமது கணையத்தில் உள்ள செல்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்து தன்னை சரி செய்து கொள்ளும்.
உங்கள் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் கொண்டு வர பழகி விட்டீர்கள் என்றால் இதுவே உங்கள் அன்றாட பழக்கமாகி விடும். சிலர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மிக அதிகமாக இருக்கின்றது என்பர். சர்க்கரை, மாவு சத்து இவை உடனடி ரத்தத்தில் சர்க்கரை அளவினை சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றி விடும். சிலருக்கு காலை வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருக்கின்றது என்று கூறுவர்.
இவர்கள் முறையாக மருந்தும் உணவும் எடுத்துக் கொண்டாலும் காலை வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு கூடுகின்றது என்பர். இது ஹார்மோன்களின் செயல்பாடு இரவில் அதிகமாக இருப்பதனால் இருக்கலாம். பகல் நேரத்தில் 120-140 அளவில் உங்கள் சர்க்கரை அளவு இருக்கின்றதா என்பதைப் பாருங்கள். காலை உயர் சர்க்கரை அளவினைப் பற்றி மருத்துவ ஆலோசனையும் பெறுங்கள்.
உங்கள் சர்க்கரை அளவின் ஏற்றத்திற்கு உங்களின் மற்ற மருந்துகளும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை (சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உட்பட) உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் சொல்லுங்கள்.
பொதுவில் கார்போ ஹைடிரேட் உணவுகள் 30-60 நிமிடத்தில் அதிக உயர்வினைக் காட்டும். புரத, கொழுப்புகள் இரண்டு மணி நேரம் பொறுத்து உடைய ஆரம்பிக்கும். ஸ்ட்ரெஸ், மனஉளைச்சல் இவை சர்க்கரை அளவினைக் கூட்டும்.
கேபின் கூட சர்க்கரை அளவினை கூட்டிக் காட்டும். சூடான தட்பவெப்பம் இருக்கும் பொழுது உடலில் நீர் சத்து குறைந்து சர்க்கரை அளவு மாறுபடலாம். ஆக அவ்வப்போது சிறிது நீர் குடித்துக் கொண்டு இருப்பதே மிகவும் நல்லது.
வயது கூடும் பொழுது ஹார்மோன் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. மேலும் நாம் ஒரே வகையான உணவு முறையினையே பழக்கப்படுத்திக் கொள்கின்றோம். காய்கறி, பழங்கள் இவற்றினை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள பழக வேண்டும். உங்கள் பரம்பரை காரணமாக வயது கூடும் பொழுது இன்சுலின் உருவாக்கம் குறையலாம்.
எனவே பாதுகாப்பு முறையாக மருத்துவ அறிவுரைபடியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, யோகா இவற்றினை அனைவருமே பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
சிறு சிறு அளவாக 6-7 முறை உணவினை எடுத்துக் கொள்வதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாதிருக்கச் செய்யும். பலருக்கும் வீட்டிலேயே சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ளும் வசதி இப்பொழுது உள்ளது. ஆனால் இதனை முறைப்படி கற்றுக் கொள்ளுங்கள்.