மாங்கனி எனும் ஞானப்பழம்
மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.
மாங்கனி முக்கனிகளுள் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் மாம்பழத்துக்கு தனி சிறப்பு உண்டு. பழனி மலை முருகன் மாங்கனி (ஞானப்பழம்) கிடைக்காததால் தன் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்ற கதையை நாம் அறிவோம்.
இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 283 மாம்பழ வகைகள் இருக்கின்றன. இவற்றில் 30 வகைகள் பிரசித்திப் பெற்றவை. நமது தேசிய கனி என்ற சிறப்பை பெற்றது மாங்கனி.
மாமரம் 300 வருடத்துக்கு பிறகும் கூட கனி தரும். இந்திய மாம்பழ வகைகளில் அல்போன்சா, மல்கோவா, சேலம் குண்டு, சேலம் அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம், லாங்க்ரா, காலாப்பட், பாதாமி அல்போன்சா, ராஸ்புரி, கோல, பெத்தரசலு, சுவர்ணரேகா, லாங்க்ரா போன்றவை பிரசித்தி பெற்றவை.
உலகில் இனிப்பான மாங்கனி பிலிப்பைன்ஸ் நாட்டில் விளையும் காரபோவ் தான். இதில் 14 வகைகள் உண்டு. தமிழகத்தில் ஏழைகளின் மாம்பழம் ருமானி. இதன் விலை குறைவு.
உலகில் மாம்பழம் அதிகம் விளைவது இந்தியாவில் தான். மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. மாங்கனி கொழுப்பைக் குறைக்கும். முகப்பருக்களை அழிக்கும். முகப்பொலிவு தரும். எலும்புகளை வலுவாக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறியடிக்கும். தாம்பத்ய வாழ்க்கைக்கு சிறந்தது.
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் நிலைக்கேற்ப மருத்துவ ஆலோசனை பெற்று மாம்பழம் சாப்பிடலாம். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடக் கூடாது. அவை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். பருவகாலத்துக்கு ஏற்ப கனிகளை உட்கொள்ள வேண்டும்.
தற்போது மாம்பழ சீசன் நடந்துகொண்டு இருக்கிறது. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.
வக்கீல் ஏ.எஸ்.பிலால், சென்னை