ஆந்திரா பாணியில் அசத்தல் இறால் தொக்கு… இப்படி செய்து அசத்துங்க!
இறாலின் தனித்துவமான சுவை காரணமாக அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் இறால் நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடும். இதனை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர்.
இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால் தொக்கு எளிமையான முறையில் ஆந்திரா பாணியில் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இறால் (சுத்தம் செய்து குடல் நீக்கியது) – 500 கிராம்
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 2
இஞ்சி-பூண்டு விழுது – இரண்டு தே.கரண்டி
மஞ்சள்தூள் – கால் தே.கரண்டி
மிளகாய்த்தூள் – இரண்டு தே.கரண்டி
மிளகு தூள் – 1 தே.கரண்டி
சோம்பு – ஒரு தே.கரண்டி
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கரம் மசாலா – ஒன்றரை தே.கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து பெரியவிட்டு, அவை நன்றாக பொரிந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதத்துக்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை பொகும் வரையில் நன்றாக வதக்கி, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்த்து மசாலாக்களின் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிவிட வேண்டும்.
பின்னர் அதில் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் நன்றாக வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கிவிட்டு இறுதியில் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான், ஆந்திரா பாணியில் இறால் தொக்கு தயார்.