கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி எப்படி செய்யனும்னு தெரியுமா..
கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களின் பிடித்த உணவாக இருக்கும் பிரியாணியில் பல வகைகள் உள்ளது. வீட்டில் பிரியாணி என்றால் அதற்காக தனி வயிறே வைத்திருப்பவர்களும் உள்ளனர்.
பெரும்பாலான நபர்கள் சாப்பிட்டிராத கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணியை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
இஞ்சி – பெரிய துண்டு
பூண்டு – 10-12 பல்
பச்சை மிளகாய் – 3
முந்திரி – 10 (நீரில் ஊற வைத்து அரைத்தது)
பிரியாணி தாளிப்பதற்கு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 2
பட்டை – 3
கிராம்பு – 5
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 2
ஜாவித்ரி – சிறிய துண்டு
கல்பாசி – 2
சோம்பு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 2 (மெல்லியதாக நறுக்கியது)
புதினா – 1 கையளவு
கொத்தமல்லி – 1 கையளவு
சிக்கன் – 3/4 கிலோ
பச்சை மிளகாய் – 3-4
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 3/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 3/4 டீஸ்பூன்
தயிர் – 1/4 கப்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – 3 கப்
பாசுமதி அரிசி – 2 கப் (நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்தது)
எலுமிச்சை – 1/2
செய்முறை:
பாசுமதி அரிசியை கழுவி, நீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு முந்திரியை நீரில் ஊற வைத்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு இஞ்சி, பூண்டு, மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஜாவித்திரி, கல்பாசி, சோம்பு போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு அரைத்து வைத்துள்ள இஞ்சி மசாலாவையும் இதில் சேர்த்து, புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும். பின்பு இதனுள் சிக்கனை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.
மேலும் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் கிளறிய பின்பு, கரம் மசாலா, மல்லித்தூள், மிளகுத் தூள், தயிர் தேவையான உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
அதனுடன் 3 கப் நீரை ஊற்றி கிளறி கொதி வந்ததும், ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து, பாதி எலுமிச்சை சாறை ஊற்றி கிளறிவிட்டு, குக்கரை மூடி வைக்கவும். ஒரு விசில் வைத்து இறக்கினால் சுவையான கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.