பெண்களே உஷார்.. இந்தப் பிரச்சினை வந்தால் ஒரே நாளில் 40 முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.!
லண்டனில் உள்ள டென்னிஸ் ஏற்பாடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் விக்டோரியா ரென்னிசன். 10 ஆண்டுகளுக்கு முன்னால், இவருக்கு 21 வயதானபோது, எப்போதும் போல ஒருநாள் வேலைக்கு சென்றார். அந்த சமயம், பணியின்போது திடீரென்று வயிறு வலித்த நிலையில், அவசரமாக கழிவறை செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால், பிரச்சினை அத்தோடு நிற்கவில்லை.
அடுத்தடுத்த ஆண்டுகளில் வயிற்றுப்போக்கு என்பதே தொடர் பிரச்சினையாகிப் போனது. ஆனால், இந்தப் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது என்று சரியாக கணித்திருந்தால் உடனடியாக தடுத்திருக்கலாம். ரென்னிசனின் முழு அனுபவத்தை தொடர்ந்து கேளுங்கள்.
ஐபிஎஸ் என்று தவறான கணிப்பு : இடைவிடாத வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், அவசரப் பிரிவு மருத்துவர்களை அணுகி ரென்னிசன் சிகிச்சை பெற்றார். இது Irritable bowel Syndrome (IBS) என்னும் குடல் அழற்சி நோய் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர். வயிறு சம்பந்தப்பட்ட பொதுவான பிரச்சினை தான் என்றும், வெகு விரைவில் இது குணமாகிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், ரென்னிசனுக்கு அதைவிட மோசமான நிலைமை ஏற்பட்டது.
ரென்னிசனுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பை மருத்துவர்கள் சரியான வகையில் கண்டறியாத நிலையில், நாளாக, நாளாக அவரது பிரச்சினை பூதாகரமாக மாறிக் கொண்டிருந்தது. தொடர் வயிற்றுப்போக்கு பிரச்சினை காரணமாக வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பெரும்பகுதி நேரம் கழிவறைக்குள்ளேயே முடங்கிப் போனார் ரென்னிசன்.
வயிற்றுப்போக்கை தூண்டக் கூடும் என்ற அச்சத்தில் பல உணவுகளை தவிர்த்து வந்தார். முக்கியமான தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு செல்வதற்கு மிகுந்த அச்சம் கொண்டிருந்தார் ரென்னிசன்.
கேட்பதற்கு அதிர்ச்சியாகவும், அதே சமயம் நம்ப முடியாததாகவும் இது தோன்றலாம். ஆனால், உண்மையிலேயே ஒரு கட்டத்தில் நாளொன்றுக்கு 40 முறை கழிவறை செல்ல வேண்டிய தேவை ரென்னிசனுக்கு ஏற்பட்டதாம். இதனால், மிகுந்த சோர்வடைந்த ரென்னிசன், தனது அன்றாட பணிகளைக் கூட செய்ய முடியாமல் திணற தொடங்கினார். வாழ்க்கை குறித்த நம்பிக்கை குறைய தொடங்கியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவர்களிடம் ரென்னிசன் பரிசோதனைக்குச் சென்றபோது, அவரது மலக்குடல் திசுவை சேகரித்து மருத்துவர்கள் பயாப்ஸி பரிசோதனை மேற்கொண்டனர். அப்போதுதான் மைக்ரோஸ்கோபிக் காலிடிஸ் என்னும் நோய் இவரை தாக்கியிருப்பது தெரியவந்தது. வழக்கத்திற்கு மாறான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக மலக்குடலின் உட்புறச் சுவர்களின் ஏற்படும் அழற்சியின் காரணமாக இதுபோன்ற நீடித்த வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தன்னுடைய பிரச்சினை எதுவென்று கண்டுபிடித்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதிலும், 10 ஆண்டுகளாக தான் அடைந்த வேதனைக்கும், முந்தைய மருத்துவர்களின் தவறான அணுகுமுறைதான் காரணம் என்பதை நினைத்து ரென்னிசனுக்கு மிகுந்த கோபமும், வேதனையும் ஏற்பட்டுள்ளது.