சூயிங் கம் சாப்பிடும்போது அதை தவறுதலாக விழுங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பபிள் கம், சூயிங் கம் என்றாலே குழந்தைகள் மட்டுமல்ல இளம் வயதினர் முதல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை இனிப்பு சுவை கொண்ட பசை. இது கூல் மின்ட் போன்ற பல்வேறு சுவை விருப்பங்களில் வருவதால் வாய் புத்துணர்ச்சிக்காக பெரியவர்கள் சூயிங் கம் மெல்லும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இதனை பெற்றோர்கள் வாங்கிக்கொடுப்பதில்லை. ஏனெனில், அந்த பசையை தெரியாமல் குழந்தைகள் விழுங்கி விடுவார்கள் என்பதால் தான். மேலும் குழந்தைகள் அதனை சாப்பிடக்கூடாது என்பதற்காக பல கட்டுக்கதைகளை கூறுவர்.
அதை விழுங்கிவிட்டால் செரிமானம் ஆவதற்கு சுமார் 7 வருடங்கள் ஆகும் என்றும், அதுவரை சூயிங் கம் வயிற்றில் அப்படியே இருக்கும் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம் அனைவரையும் பயமுறுத்துவதற்கு இந்த கட்டுக்கதைகள் போதுமானதாக இருந்தபோதிலும், இந்த கருத்துக்கள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பது தான் உண்மை. அப்படியானால் சூயிங் கம்மை தெரியாமல் விழுங்கும்போது என்ன நடக்கும் என்பதை அறிவியல் அடிப்படையில் தெரிந்துகொள்வோம்.
சூயிங் கம் விழுங்கும்போது என்ன நடக்கும்? : சூயிங் கம் என்பது ஒரு வகை ஒட்டக்கூடிய எலாஸ்டிக் பொருளாகும் ஆகும். நீங்கள் அவற்றை மணிக்கணக்கில் மெல்லலாம். ஆனாலும் அவற்றின் அளவுகளில் எந்த மாற்றங்களையும் நீங்கள் காண மாட்டீர்கள். இதன் காரணமாகவே அதை விழுங்கும் போது வயிற்றுப் பகுதியில் வெகு நேரம் செரிமானம் ஆகாமல் இருக்கும் என்றும் குடலில் அடைப்பு ஏற்பட வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது. உண்மையில் நமது உடலில் சூயிங் கம் ஜீரணம் ஆகாது.
ஆனால் அது ஏழு ஆண்டுகளாக செரிமான மண்டலத்தில் அப்படியே இருக்கும் என்ற கருத்து உண்மையல்ல. காய்கறிகள் மற்றும் விதைகளில் உள்ள நார்ச்சத்து போலவே, கம் அடிப்படை கரையாதது. நம் உடலில் உள்ள செரிமான நொதிகள் உணவுகளை கரைக்குமே தவிர அவற்றை உடைக்க உருவாக்கப்படுவதில்லை. எனவே நம் வயிற்றில் கம் அப்படியே இருக்கிறது. ஆனால் நாம் உண்ணும் மற்ற உணவுகளைப் போலவே, இது செரிமான அமைப்பு வழியாக நகர்ந்து உடலில் இருந்து மலத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இது குடலில் அடைப்புக்கு வழிவகுக்குமா? : இந்த மெல்லும் பசை காட்டாயம் குடல் அடைப்புக்கு வழிவகுக்கும். ஆனால் இது மிகவும் அரிதாகவே நடக்கிறது. ஒரு நபர் அதிக அளவு மெல்லும் பசை விழுங்கும் பட்சத்தில் அவை குடல் அடைப்புக்கு வழிவகுக்கும். இதனால் ஒருவர் மலச்சிக்கல் பிரச்சனையால் கூட பாதிக்கப்படலாம். இது பெரும்பாலும் குழந்தைகளின் விஷயத்தில் நிகழ்கிறது. கடந்த 1998ம் ஆண்டு Pediatrics இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் பல பசைகளை விழுங்கிய பின்னர் குடல் அடைப்பு பிரச்சனைகளை அனுபவிக்க தொடங்குவர். இது கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். தவிர, சூயிங் கம் விழுங்குவதும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
சூயிங் கம் குடல் வழியாக வெளியேற எவ்வளவு நேரம் ஆகும் : நிபுணர்களின் கூற்றுப்படி, செரிமான பகுதியில் இருந்து சூயிங் கம்களை வெளியேற 40 மணி முதல் பல நாட்கள் வரை ஆகும். இது உணவை விட அதிக நேரம் எடுக்கும். ஏனெனில் இது நமது செரிமான மண்டலத்தில் உள்ள மற்ற உணவுகளை விட மெதுவாக நகர்ந்து செல்லும். ஆனால் கட்டாயம் பல வருடங்கள் எடுத்துக்கொள்ளாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.