அசத்தல் சுவையில் அப்பள குழம்பு வேண்டுமா? வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்
பலருக்கும் பொரித்த அப்பளம் சாப்பிடுவதில் அலாதியான இன்பம் இருக்கும் அதிலும் தங்களுக்கு பிடித்த உணவில் அப்பளத்தை தொட்டு சாப்பிடுவது என்றால் சொல்லவும் வேண்டுமா? சொர்க்கம் தான்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அப்பளமும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அப்பளத்தை வழக்கம் போல் பொரித்து கொடுக்காமல் சற்று வித்தியாசமாக குழம்பு செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்னும் வேண்டும் என கேட்பார்கள்.
அப்படி அசத்தல் சுவையில் வெறும் பத்தே நிமிடங்களில் அப்பள குழம்பை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அப்பளம் – 4-6
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
வரமிளகாய் – 2
பூண்டு – 5-8 பல்
சின்ன வெங்காயம் – 15
கறிவேப்பிலை – 1 கொத்து
மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
மல்லித் தூள் – 3 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
வெல்லம் – 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, அப்பளத்தைப் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மீதம் உள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, அதனுடன் வரமிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாகக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இதன் பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 2 நிமிடங்கள் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு 5 நிமிடம் வரையில் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
இறுதியாக பொரித்து வைத்துள்ள அப்பளத்தை நொறுக்கி சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு சிறிதளவு வெல்லத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் அப்பள குழம்பு தயார்.