மெது மெதுன்னு பஞ்சுப்போன்ற குலாப் ஜாமுன் வேண்டுமா.. இப்படி செய்து பாருங்க
குலாப் ஜாமூன் பொதுவாக திருமணங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது பரிமாறப்படுகிறது. இது சூடாகவும் குளிராகவும் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் ஒரு இனிப்பு பண்டமாகும்.
மேலும் இது பெரும்பாலும் பிஸ்தா அல்லது பாதாம் போன்ற நறுக்கப்பட்ட நட்ஸ் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.
இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் பஞ்சுப்போன்று மென்மையாக குலாப் ஜாமுன் மிக்ஸை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எம்.டி.ஆர் குலாப் ஜாமுன் மிக்ஸ் (விருப்பிய குலாப் ஜாமுன் மிக்ஸ் பயன்படுத்தலாம்)
பால்
தண்ணீர்
நெய்
நல்லெண்ணெய்
ஏலக்காய்
குங்குமப்பூ
செய்முறை
முதலில் கால் லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமுன் மிக்ஸ் பவுடரை போட்டு காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பாலுக்கு பதிலாக தண்ணீரும் பயன்படுத்தலாம் சுவை நன்றாக இருப்பதற்காக பால் பயன்படுத்துவது சிறந்தது.
விரல்களை மட்டுமே பயன்படுத்தி பொறுமையாக பிசைய வேண்டும் ஒட்டும் பதத்தில் மாவு வரும் வரையில் பிசைந்துக்கொள்ள பாத்திரத்தை மூடி சிறிது நேரம் வைக்க வேண்டும்.
அதன் பின்னர் சர்க்கரை பாகு தயாரிக்க கடாயில் 500 கிராம் சர்க்கரை போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கரைத்து விட்டுக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நன்றாக கரைந்து பாகு பதத்துக்கு வரும் போது 10 கிராம் குங்குமப்பூ மற்றும் 3-4 ஏலக்காயையும் இடித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குங்குமப்பூ நல்ல நிறமும், ஏலக்காய் மனமும் தரும். ஒரு கம்பி பதத்துக்கு வரவேண்டிய அவசியம் இல்லை கொஞ்சம் கெட்டியாக வந்தவும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
பின்னர் கையில் கொஞ்சமாக எண்ணெய் தடவி இரண்டு கோலி குண்டு அளவுக்கு மாவை உருட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொரிப்பதற்கு ஏற்ற வகையில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடுபடுத்தி மிதமான தீயில் வைத்து குலாப் ஜாமுன் உருண்டைகளை பொன்நிறமாக பொரித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியில் சர்க்கரை பாகில் குலாப் ஜாமுன்களை உருண்டைகளை போட்டு ஒரு மணி நேரம் ஊறவிட்டு எடுத்தால் அவ்வளவு தான் பஞ்சுபோல் மெது மெதுன்னு அசத்தல் சுவையில் குலாப் ஜாமுன் தயார்.