வீடே மணக்கும் நண்டு மசாலா குழம்பு… ஒரு முறை இப்படி செய்து பாருங்க
அசைவ உணவு வகையான நண்டை சமைத்து உண்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
அசைவ உணவுகள் என்றாலே பெரும்பாலும் மீன், சிக்கன், மட்டன் போன்ற உணவுகள் தான் நம் நினைவுக்கு வரும்.
பிரதானமாக வீடுகளில் சமைக்கும் அசைவ உணவுகளும் இவை தான். ஆனால் கடல் உணவான நண்டு உண்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட எவ்வளவு சிரமப்பட்டாலும் அதன் உள்ளே இருக்கும் சுவையான சதையை சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்தமானதாக காணப்படுகின்றது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு எவ்வாறு எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு மாரினேட் செய்ய தேவையான பொருட்கள்
நண்டு – 10-15
மஞ்சள் – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1தே.கரண்டி
உப்பு – சிறிதளவு
குழம்பு தயாரிக்க தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 1
துருவிய தேங்காய் – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தே.கரண்டி
கரம் மசாலா தூள் – 2 தே.கரண்டி
கருப்பு மிளகு – 2 தே.கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தே.கரண்டி
எண்ணெய் – 3 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் நண்டுகளை சுத்தம் செய்து சமைப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை பாத்திரத்தை மூடி ஊறவைக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் துருவிய தேங்காய், கருப்பு மிளகு மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றையும் போட்டு போஸ்ட் போன்ற பதத்தில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வத்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்மை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் உப்பு கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் மாரினேட் செய்த நண்டு துண்டுகளை அதனுடன் சேர்த்து மசாலா குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.
குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான நண்டு மசாலா குழம்பு தயார்.