குப்பையில் போடும் வாழைக்காய் தோலில் சூப்பரா பொரியல் செய்யலாம் தெரியுமா..
பொதுவாகவே அனைவரும் வீடுகளில் வாழைக்காய் சமைப்பது வழக்கம். இதனை பல்வேறு முறைகளில் சமைத்து சாப்பிடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. வாழைக்காயை சமைத்துவிட்டு வாழைக்காய் தோலை வீணாக வீசிவிடுகின்றோம்.
உண்மையில் வாழைக்காயை விட வாழைக்காய் தோலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதுடன் எண்ணற்ற மருத்துவ குணங்களையும் இது கொண்டுள்ளது.
இவ்வாறு அளப்பரிய மருத்துவ குணம் நிறைந்த வாழைக்காய் தோலை இனிமேல் வீணாக்காமல் எப்படி சுவையான பொரியல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முற்றிய இரண்டு வாழைக்காய்களின் தோல்
மிளகாய்த் தூள் – அரை தே.கரண்டி
மஞ்சள் தூள் – கால் தே. கரண்டி
நறுக்கிய பூண்டு – 5
நறுக்கிய வெங்காயம் – 5
கடுகு, சீரகம், உளுந்து – தலா 1 தே.கரண்டி
தேங்காய்த் துருவல் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
வாழைக்காய்த் தோலைப் பொடியாக நறுக்கி, மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் தோல் கருக்காமல் இருக்கும்.
நறுக்கிய தோலுடன் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், பூண்டு ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், வாழைக்காய்த் தோல் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட வேண்டும்.
பிறகு தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து இறக்கினால் வாழைத்தோல் பொரியல் தயார்.