ஆசைப்பட்டு முழு பலாப்பழம் வாங்கியாச்சு.. எப்படி வெட்டுவது என தெரியலையா..? பிசுபிசுப்பு ஒட்டாமல் ஈசியா எடுக்க டிப்ஸ்..!
பலாப்பழத்தின் தோல் எவ்வளவு கரடுமுரடான இருக்கிறதோ அதை விட பல மடங்கு அதன் உள்ளே உள்ள பழம் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்கும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பலாப்பழத்தை காயாக இருக்கும்போதே வெட்டினால், அதை காய்கறி போல் சமையலுக்கு பயன்படுத்தலாம். அதே நேரத்தில் பழுத்தால் பழமாகவும் சாப்பிடலாம். சந்தையில் பலாப்பழம் வாங்கும்போது, முழு பழமாக குறைந்த விலையில் இருந்தாலும் அதை உறித்து எடுக்க தெரியாமல் அதிக விலையானாலும் உறித்த சுளையாகவே வாங்கி வருவார்கள். இனி அந்த சிரமம் தேவையில்லை.. இந்த எளிய டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள்.. இவ்வளவுதான் விஷயமா என நீங்களே நினைக்கத் தோன்றும்.
பலாப்பழத்தை வீட்டில் வெட்டி சாப்பிடுவதே சிறந்தது :
பலர் சந்தையில் இருந்து வெட்டிய பலாப்பழத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். பல தெருவோரக் கடைகளில் பலாப்பழத்தை வெட்டி பாலிதீனில் வைத்து விற்பனை செய்கின்றனர். இத்தகைய பலாப்பழத்தில் பாக்டீரியாக்கள் அதிகமாக உற்பத்தியாகும். அவற்றை அப்படியே வீட்டிற்கு வாங்கி வந்து சாப்பிட்டால் வயிற்று வலி அல்லது மற்ற உபாதைகளும் ஏற்படலாம். அதனால வீட்டுக்குக் கொண்டு வந்து வெட்டி சாப்பிடுவதே சிறந்தது.
வீட்டிலேயே பலாப்பழத்தை வெட்டி எடுக்க டிப்ஸ் :
முதலில் பலாப்பழத்தின் உள்ளே இருக்கும் ஒட்டும் பசை தரையில் ஒட்டாமல் இருக்க பெரிய நியூஸ் பேப்பரை விரித்துக்கொள்ளுங்கள்
அடுத்து ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெ கொஞ்சம் ஊற்றிக்கொள்ளுங்கள். நல்ல ஷார்ப்பான இரண்டு கத்திகள் வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு பெரிய கத்தி , ஒரு சிறிய கத்தி இருப்பது நல்லது. பெரிய கத்தி காயை பிரித்தெடுக்கவும், சிறிய கத்தி சுளைகளை எடுக்கவும் உதவும்.
இப்போது கத்தி மற்றும் உங்கள் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள். பின் பலாப்பழத்தை பேப்பர் மேல் வைத்து அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் கத்தியின் உதவியுடன் பழத்தின் நடுவே நீளமாக கீரல் போடவும்.
உங்கள் கையிலும் கத்தியிலும் எண்ணெய் இருப்பதால் உங்கள் கை வழுக்கலாம். எனவே கவனமாக கையாளுங்கள். இல்லையெனில் பழத்தை பிடித்துக்கொள்ள மற்றவர் உதவியை நாடலாம்.
இரண்டு பக்கமும் கீறல் போட்டதும் கைகளால் இரு பக்கத்தையும் பிடித்து இழுக்க தனித்தனியாக வந்துவிடும்.
இரண்டு பகுதியாக பிரித்ததும் பலாப்பழத்தில் இருந்து வெளிவரும் வெள்ளையான பசையை டிஷ்யூ பேப்பரால் ஒத்தி எடுங்கள். இல்லையெனில் ஒரு பாலிதீன் கவரில் ஒரு நியூஸ் பேப்பரை உருண்டையாக சுருட்டி அதற்குள் போட்டு கவரை கட்டிக்கொள்ளுங்கள். பின் அந்த கவரை தொட்டு தொட்டு ஒத்தி எடுக்க பிசுபிசுப்பு வந்துவிடும். அவ்வப்போது கைகளிலும் கத்தியிலும் எண்ணெய் தடவிக்கொண்டே இருக்கவும்.
பின் தேங்காய் எண்ணெய் தொட்டும் ஒத்தி எடுக்கலாம். இவ்வாறு எடுக்க பசை நீங்கிவிடும்.
பின் அதன் மேல் உள்ள நார்களை சின்ன கத்தியில் எண்ணெய் தடவி கீறல் போடுங்கள். பின் உள்ளே உள்ள சுளை வந்துவிடும். அதை அருகில் ஒரு கிண்ணம் வைத்து ஒவ்வொரு சுளைகளாக போடுங்கள். கையில் எண்ணெய் அவ்வப்போது தடவிக்கொண்டே இருங்கள். அப்போதுதான் பசை ஒட்டாது. அவ்வளவுதான்.. பலாப்பழம் உறிப்பது சுலபமே…