ஆரோக்கியம்உலக நடப்புகள்புதியவைமருத்துவம்
சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும்..? 5 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!
மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு அடையும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட கல்லீரலில் கொழுப்பு அடைய காரணம் என்ன தெரியுமா? சர்க்கரை தான்!
நாம் தினசரி சாப்பிடும் பல வகையான உணவுகள், அருந்துகின்ற பானங்கள் என பலவற்றில் சர்க்கரையை சேர்த்துக் கொள்கிறோம். இந்த சர்க்கரை என்பது ஒரு வகை மாவுச்சத்து ஆகும். உணவுகளுக்கு இனிப்பூட்ட அதனை பயன்படுத்திக் கொள்கிறோம். நீரிழிவு அபாயம் கருதி முற்றுலுமாகவே சர்க்கரையை நீங்கள் நிறுத்திவிட்டதாக கருதிக் கொண்டாலும், உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் சர்க்கரை சத்துள்ள உணவை சாப்பிட்டு வருவீர்கள்.
அதாவது, வாழ்வின் எந்த கட்டத்தில் சர்க்கரை சத்துள்ள உணவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்கவே முடியாது. ஏனென்றால் நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் போன்ற பலவற்றில் சர்க்கரை சத்து உள்ளது. உதாரணத்திற்கு கொய்யா, தர்பூசணி, இளநீர் என்று நீங்கள் விரும்பி சாப்பிடும் ஒவ்வொன்றிலும் லேசான இனிப்புச் சுவை இருக்கத்தான் செய்யும்.
ஆக, இயற்கையாகவே உணவுடன் கலந்த சர்க்கரையை நாம் ஒதுக்கவே முடியாது. நம் உடலுக்கு ஆற்றல் கிடைக்க அது தேவையானதும் கூட. ஆனால், வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், சர்க்கரை பாகு என்று பிரித்தெடுக்கப்பட்ட சர்க்கரை பொருட்கள் நம் உடல் நலனுக்கு வெவ்வேறு சிக்கல்களை கொண்டு வரும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.
உடல் எடை அதிகரிக்கும் : நீங்கள் சர்க்கரையை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடை அதிகரிப்பு போன்றவை ஏற்படும். இதன் எதிரொலியாக நீரிழிவு நோய் மற்றும் குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களும் கூட தாக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் நபர்கள் சர்க்கரையை குறைத்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோய் : உலகெங்கிலும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோய்களில் இதுவும் ஒன்று. இதனை ஸ்லோ பாய்சன் என்றும் சொல்லலாம். ஆனால், நீரிழிவு பாதிக்கப்பட்ட உடனே உயிரிழப்பு ஏற்படுவதில்லை என்பதால் பலரும் இதை சீரியஸாக கருதுவதில்லை. இருப்பினும், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். அதற்கு சர்க்கரையை முதலில் தவிர்க்க வேண்டும்.
பல் பிரச்சினைகள் : குழந்தைப் பருவத்திலேயே பலரையும் பாதிக்கக் கூடியது பற்சிதைவு நோய் ஆகும். சர்க்கரையில் இருக்கக் கூடிய பாக்டீரியா நம் பற்கள் மற்றும் ஈறுகளில் தங்கி சிதைவை ஏற்படுத்தும். பல்லு போனா சொல்லு போச்சு என்ற பழமொழிக்கு ஏற்ப பற்களின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பவர் என்றால் சர்க்கரையை கைவிட வேண்டும்.
இதயநல பிரச்சினைகள் : சர்க்கரையை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதால் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும் மற்றும் ரத்த அழுத்தம் உயரும். இதன் எதிரொலியாக உங்களுக்கு இதயநோய் பிரச்சினைகள் வரக் கூடும். ஆக, இதய ஆரோக்கியத்தை காக்க சர்க்கரையை பெருமளவில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
கல்லீரல் நோய் : மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு அடையும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட கல்லீரலில் கொழுப்பு அடைய காரணம் என்ன தெரியுமா? சர்க்கரை தான், நாளடைவில் கல்லீரலை முற்றிலுமாக செயலிழக்கச் செய்து, இதர உடல்நல பிரச்சினைகளையும் இது கொண்டு வந்து சேர்க்கும்.