அடிக்கடி நகம் உடைகிறதா? அப்ப இத செய்யுங்க…
நகங்களின் பக்கவாட்டில் ஏற்படும் சரும உதிர்தலுக்கு பப்பாளி, அன்னாசி பழங்களை பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் அன்னாசி பழ ஜூஸுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பப்பாளி சாறை கலந்து கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை ஒரு டேபிள்ஸ்பூன் வினிகரில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையுடன் பழ கூழை கலந்து நகங்களின் சுற்றுப்புற பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நகங்களின் சுற்றுப்புற பகுதி மென்மையாக மாறிவிடும். நகமும் பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும். சரும உதிர்வு பிரச்சினையும் ஏற்படாது.
நகங்கள் உடைந்துபோவதை தடுக்கவும் முட்டையின் மஞ்சள் கருவை உபயோகப்படுத்தலாம். அரை கப் தேனுடன், அரை கப் விளக்கெண்ணெய், முட்டையின் மஞ்சள்கரு, ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு ஆகியவற்றை கலந்து பாட்டிலில் ஊற்றிவைக்க வேண்டும். அதனை இரவில் தூங்க செல்வதற்கு முன்பு நகங்களில் தடவி வந்தால் நகம் உடைதல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தியும் நகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம். எலுமிச்சை பழத்தின் தோல் பகுதியையும் நகங்களில் தடவி வரலாம். அதற்கு நகம் உடைதல், நகவெடிப்பு போன்ற பாதிப்புகளை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.