உறவுகள்உலக நடப்புகள்புதியவை

கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..

கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..

கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..
சிலருக்கு கோபம் வந்தால் உடனே ஆக்ரோஷமாகிவிடுவார்கள். நிதானத்தையும், பொறுமையையும் இழந்து கத்தத் தொடங்கிவிடுவார்கள். வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை கொட்டிவிடுவார்கள். அவை மற்றவர் மனதை காயப்படுத்தக்கூடியதாகவும், காது கொடுத்து கேட்க முடியாததாகவும் இருக்கும். தனக்கு நெருக்கமானவர்கள் தவறு செய்திருந்தாலும் கோபத்தில் கடுமையான சொற்களை பயன்படுத்திவிடுவார்கள்.

சம்பந்தப்பட்டவர் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டாலும் அதை காது கொடுத்து கேட்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கோபம், அவர்களுக்குத்தான் பாதகத்தை உண்டாக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால், சிலருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உண்டாகிவிடும். அதுவே தொடரும்போது பல்வேறு நோய் பாதிப்புகளால் அவதிப்பட நேரிடும். உடல் நலத்தை கெடுக்கும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு எளிமையான வழிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் அனைவரும் பின்பற்றத்தக்க எளிய வழிமுறைகள் இதோ:

கோபம் வந்துவிட்டால் மனதில் பதற்றம் தொற்றிக்கொள்ளும். நிம்மதி குலைந்துவிடும். கோபம் வரும்போது நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். அப்போது 1 முதல் 10, 20 வரை எண்களை மனதுக்குள் பொறுமையாக எண்ணிக்கொண்டே வரலாம். அப்படி செய்யும்போது மனம் இலகுவாகிவிடும். கோபமும் படிப்படியாக குறையத்தொடங்கிவிடும்.

கோபம் வந்தால் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த சமயத்தில்தான் வார்த்தைகள் கடுமையாக வெளிப்படும். அவை கேட்பவர்கள் மனதை கடுமையாக பாதிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு சிந்திப்பதுதான் சரியான வழிமுறையாக அமையும். என்ன பேச வேண்டும்? எந்த மாதிரியான வார்த்தைகளை உச்சரிக்கலாம்? பிறர் மனம் புண்படாதபடி சிரித்த முகத்துடன் எப்படி பேசுவது? என நிதானமாக யோசித்துவிட்டு பேச வேண்டும். அப்படி பேசும்போது கோபம் வெளிப்பட்டாலும் அதனை நிதானமாக கையாண்டுவிடலாம்.

கோபமாக இருக்கும் சமயத்தில் மற்றவர்கள் சமாதானம் செய்தாலும் அதுவும் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட சூழலில் தனிமையில் சில நிமிடங்களை கழிப்பதுதான் நல்லது. தனிமையில் அமர்ந்திருந்து எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை அமைதிப்படுத்தலாம்.

நடைப்பயிற்சியும் கோபத்தை கட்டுப்படுத்த உதவும். சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்து வரலாம். அல்லது ஜாக்கிங் மேற்கொள்ளலாம். அப்படி செய்தால் மூளை செல்கள் ரிலாக்ஸ் அடைந்து மனம் இலகுவாகும்.

மனதுக்கு நெருக்கமானவர்கள் கோபம் கொள்ளும்படி நடந்து கொண்டால் அமைதி காப்பதுதான் நல்லது. இல்லாவிட்டால் கடுமையான வார்த்தைகள் வெளிப்பட்டு இருவரின் மனமும் வேதனைப்படக்கூடும். கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்தி அவர்களை மன்னித்துவிடுவதுதான் நல்லது. ஏனெனில் கோபத்திற்கு இடம் கொடுத்தால் ‘பாசிடிவ் பீலிங்’ அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.

எந்த சூழ்நிலையிலும் கோபம் நீண்ட நேரம் நீடிக்க அனுமதித்துவிடக்கூடாது. அது மனதை பலவீனப்படுத்திவிடும். கோபத்தை தணிப்பதற்கு மனதை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது, இசையை கேட்பது மனதை சாந்தப்படுத்தும். கோபத்தையும், டென்ஷனையும் தணிக்க உதவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker