ஆரோக்கியம்உறவுகள்புதியவை

அவலத்தில் முடியும் அவசர வாழ்க்கை

அவலத்தில் முடியும் அவசர வாழ்க்கை

அவலத்தில் முடியும் அவசர வாழ்க்கை
இன்றைய மனித வாழ்க்கை அவசரத்தோடு இணைந்து விட்டது. ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது அவசரம் தொற்றிக்கொள்கிறது. இந்த அவசரம், அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி சற்றும் சிந்திக்க இடம் கொடுக்காது.

பயணத்தின்போது பெரும்பாலானோர் அவசரம் கொள்வார்கள்: குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அந்த சமயத்தில் மனதில் நிலைத்திருக்கும். அப்படி அவசரப் படுபவர்கள் முன்கூட்டியே திட்டமிட்ட நேரத்திற்குள் புறப்படமாட்டார்கள். அதுதான் அவசரத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்துவிடுகிறது. எங்கு செல்ல இருந்தாலும் சென்றடையும் இடத்திற்கு இடையேயான பயண நேரத்தை கவனத்தில் கொண்டு புறப்பட வேண்டும். வீட்டில் இருந்து புறப் படுவதற்கு திட்டமிட்டிருக்கும் நேரத்துக்கு கால் மணி அல்லது அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்புவதுதான் சரியானது. அது அவசரத்தையும், வீண் டென்ஷனையும் தவிர்க்கும்.

சிந்தனையை முற்றிலும் ஆக்கிரமித்துக்கொள்ளும் இந்த அவசரம், தினம் தினம் ஆபத்தை நோக்கித்தான் பயணிக்க செய்யும். அவசரம் எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை கண் கூடாகவே உணரலாம். ரெயிலில் வெளி மாநிலத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்த இளைஞர் ஒருவர், வீட்டில் இருந்து அவசரம் அவசரமாக புறப்பட்டு ரெயில் நிலையம் வந்தடைந்தார். காலதாமதமாகவே பிளாட்பாரத்திற்குள் நுழைந்ததால் ரெயில் புறப்பட தயாரானது. அவசர அவசரமாக ரெயிலை நோக்கி ஓடினார். அதற்குள் ரெயில் கிளம்பிவிட்டது. ஏதாவதொரு பெட்டியில் ஏறிவிடலாம் என்று அவசரம் அவசரமாக ஓடோடி சென்று ரெயில் பெட்டியின் கதவோரம் இருக்கும் கம்பியை பிடித்து ஏறிவிட்டார்.

ஆனால் துரதிருஷ்டமாக அந்த பெட்டியின் கதவு பூட்டியே இருந்திருக்கிறது. அதனால் கதவை திறந்து உள்ளே செல்ல முடியவில்லை. கம்பியை பிடித்தபடி படிக்கட்டில் தொங்கிக்கொண்டே பயணித்தார். சிறிது நேரத்திற்குள் யாராவது கதவை திறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த பெட்டியில் யாரும் இல்லை. அது ஒரு ஏ.சி. பெட்டி என்பதால் உள் கதவும் பூட்டிய நிலையிலேயே இருந்தது. ரெயில் நிலையத்தில் நின்றிருந்தவர்கள் அவசர அவசரமாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் ரெயில் வெகு தூரம் சென்று விட்டது. அடுத்த ஸ்டேஷனுக்கு அவசரமாக தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் ரெயிலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த இளைஞர் கீழே விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டார். அந்த இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியில் இருந்தவர். எப்படியாவது ரெயிலை பிடித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் அவசரப்பட்டு ஏறி உயிரை பறிகொடுத்துவிட்டார். இது ஒரு உதாரணம்தான். இதுபோல அவசர கதியில் தினம் தினம் பல விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படி அவசர கதியில் இயங்கு பவர்கள் மத்தியில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் இருப்பதில்லை.

இன்றைய மனிதனின் பெரும்பாலான நேரத்தை செல்போன்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. செல்போனில் மூழ்கியபடியே நிறைய பேர் பொழுதை போக்குகிறார்கள். ஊரடங்கு காலகட்டமும் அந்த சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்திருக்கிறது. செல்போனில் எதிர் முனையில் இருப்பவர்களிடம் பேசியபடியே கண் எதிரில் நிற்கும் மற்றவர்களின் கேள்விக்கு பதில் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர் யாரிடம் பேசுகிறார் என்று கேட்பவர்கள் இருவருமே குழம்பி போய்விடுவார்கள். எதிரில் நிற்பவரின் கேள்விக்கு பதில் சொல்லியபடியே அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவார்கள். செல்போனிலேயே மூழ்கி கிடப்பது நரம்பு மண்டலத்தை பாதித்து அமைதி இழக்க செய்து விடும். தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களும் அதிக நேரத்தை அபகரித்துக் கொள்கின்றன. அவற்றுடன் நேரத்தை செலவிட்ட பிறகுதான் மீதமுள்ள நேரத்தில் மற்ற அன்றாட வேலைகளை செய்யும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுகிறார்கள்.

குறுகிய நேரத்திற்குள் வேலைகளை அவசரம் அவசரமாக செய்து முடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அது முடியாத பட்சத்தில் மன அழுத்தம் ஆக்கிரமித்துக்கொள்ளும். அது ஏற்படுத்தும் ஆபத்தை உணராமல் எல்லாவற்றிலும் அவசரம் காட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்கும் போதுமான நேரம் ஒதுக்கினால் அவசரப்பட வேண்டியதில்லை. நிதானமாகவும், அமைதியாகவும் அந்த வேலைகளை செய்து முடிக் கலாம். எந்த வேலையாக இருந்தாலும் அதற்கு நேரத்தை நிர்ணயித்து செலவிட பழக வேண்டும். உணவு அருந்துவதிலும் அவசரம் கூடாது. நிதானம் தேவை. குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவசரமாக சாப்பிடும் வழக்கத்தை மறக்கடித்துவிடும். நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். எழுதுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். எழுத்தும், வாசிப்பும் மனதை அமைதிப்படுத்தும். அவசர மனநிலைக்கு கடிவாளமிடும்.

எந்த வேலையையும் அவசரமாக செய்வதற்கு முயற்சிக்காதீர்கள். டிக்கெட் வாங்குமிடத்தில் அவ சரம், ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்கு அவசரம், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவசரம், சிக்னல் விழுவதற்குள் அவசரம். இப்படி நாள் முழுவதும் எல்லாவற்றிற்கும் அவசரம் காட்டி என்ன சாதிக்கப்போகிறோம் என்பதை யோசித்து பாருங்கள். அவசர அவசரமாக செயல்படும்போது மறதியும் தொற்றிக்கொள்ளும். அவசரமாக சென்று பணம் எடுக்கும்போது ஏ.டி.எம். கார்டை தவற விட்டிருப்போம், வண்டி சாவியை தொலைத்திருப்போம். இப்படி பல மடங்கு டென்ஷனைத்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு வேலைகளை செய்து பழகுங்கள். அப்படி செயல்பட்டாலே அவசரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker