புதியவைமருத்துவம்

வாதநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை

கவுட் எனப்படுவதும் ஒருவகை ஆர்த்தரைட்டிஸ், வாத நோய்தான். இந்த நோய்க்கு ஆயுர்வேதத்தில் என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கவுட் எனப்படுவதும் ஒருவகை ஆர்த்தரைட்டிஸ், வாத நோய்தான். இது திடீரென வரும். பாதிக்கப்பட்ட இடத்தில் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும். அந்த இடம் சிவந்து போகும். பெரும்பாலும் பாதத்தில் கால் பெருவிரல் அடியில் வரும். சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மீண்டும், மீண்டும் வரும். காலப்போக்கில் மூட்டுக்கள், பிடி திசுக்கள், டென்டன்ஸ் எனப்படும் ஜவ்வு ஆகியவற்றையும் பாதிக்கும்.

இந்நோய், ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாகும்போது வரும். யூரிக் அமிலம் படிகங்களாகி அவை மூட்டுக்கள், ஜவ்வு மற்றும் சுற்றியுள்ள திசுக்களையும் பாதிக்கும். ஆண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவர். பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பின் இந்நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

அறிகுறிகள் :

* இரவில் திடீரென வரும்.
* வந்து 24 மணிநேரம் வரை வலி மிகக்கடுமையாக இருக்கும்.
* பெரும்பாலும் பாதத்தில் பெருவிரல் அடியில் வந்தாலும், பாதம், கணிக்கால், முழங்கால், கை, மணிக்கட்டு ஆகிய இடங்களிலும் வரலாம்.
* கடுமையான வலி குறைந்தபின்னும், ஒ
ருவித சவுகரியம் இருந்து கொண்டே இருக்கும். அவை நீண்ட நாட்கள் இருப்பதோடு, பிற மூட்டுக்களையும் பாதிக்கும்.
* பாதித்த இடம் சிவந்து உப்பி விடும்.

கவுட் தீவிரமாகும்போது, யூரிக் அமில படிகங்கள் (டோபி) உடலின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் மென்மையான திசுக்களை பாதிக்கும். பெரும்பாலும் விரல்களில் முடிச்சு முடிச்சாக காணப்பட்டாலும், நோய் தீவிரமாகும்போது, தோள் பட்டை துனி, காது ஆகிய இடங்களிலும் வரலாம். சில சமயம் குரல்வளை, முதுகுத்தண்டு ஆகிய இடங்களில் வரவாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகம், இதயம் ஆகியவற்றில் கூட யூரிக் அமிலப்படிகங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

அதிக யூரியா தான் கவுட் நோய்க்கு காரணம் என்றாலும் வேறுசில காரணங்களாலும் இந்நோய் வரலாம். உணவு முறை பரம்பரை, யூரிக் அமில உப்பான யூரேட் குறைவாக சுரப்பது ஆகியன அவற்றுள் சில மதுப்பழக்கம், இளமையிலேயே அதிக உடல் எடை, அதிக இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாட்டில் குறைபாடு, செயற்கை ரசாயனங்கள் சேர்ந்து வளர்ந்த உணவை உண்டு வளர்த்த இறைச்சி, மீன் ஆகியவற்றை அதிகம் உண்பது ஆகியனவும் சில காரணங்கள்.

வழக்கமாக யூரிக் அமிலம் ரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும். யூரிக் அமிலம் குறைவாக சுரப்பதன் காரணமாக 90 சதவீத கவுட் நோய் வருகிறது. அதிக உற்பத்தியால் 10 சதவீத கவுட் நோய் வருகிறது. மூட்டுக்களை சுற்றியுள்ள திரவத்தில் யூரிக் அமில படிகங்கள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

* ரத்தத்தில் யூரியாவின் அளவு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
* ரத்தத்தில் எலக்ட்ரோலைட், எரித்ரோசைட் அளவு பார்க்க வேண்டும்.
* வெள்ளை அணு எண்ணிக்கை எவ்வளவு என்று அறிய வேண்டும்.
* சிறுநீரக செயல்பாடு பற்றி அறிய வேண்டும்.
* எக்ஸ்ரே மூலம் யூரேட் படிகங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதையும், எலும்பின் பாதிப்பு அளவையும் அறியலாம்.

ஆயுர்வேத சிகிச்சை முறை

வாத ரக்தம், ஆத்ய வாதம் என்பது தான் ஆயுர்வேதத்தில் கவுட் நோய்க்கான பெயர். வாததோஷம், பித்த தோஷம் ரக்ததாது ஆகியவை நிலைப்பாடு மாறுவதே இந்நோய்க்கான காரணம். ஆயுர்வேத கூற்றுப்படி, அதிக உப்பு, புளிப்பு, கசப்பு கார சுவையுள்ள உணவுகள், அதிக எண்ணெய் உணவுகள், அதிக சூடான உணவுகள், உலர்ந்த, பாதுகாக்கப்பட்ட, கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள், கொள்ளு, உளுந்து, புளித்த மோர், தயிர், மது, பகல் தூக்கம், இரவில் தூங்காமை, கோபம் சேர்க்கக்கூடாத முறைகளில் சேர்த்த உணவுகள் (எ.காட்டு: பாலுடன் அல்லது பால் பொருட்களுடன் மீன் சேர்க்கக்கூடாது) ஆகியன கவுட் நோயை அதிகமாக்கும்.

உள்ளே சாப்பிடும் மருந்துகள்

* நீர்முள்ளி கஷாயம் எனப்படும் (கோகிலாஜகம் கஷாயம்). 15 மீ. கஷாயம் + 60 மீ. தண்ணீர் சேர்த்து காலை மாலை வெறும் வயிறில் உணவுக்கு ஒரிரு மணிநேரம் முன்பு

* சீந்தில்கொடி எனப்படும் குடூச்சி கஷாயம் மேற்சொன்னவாறே எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பால் முதுக்கன் கிழங்கு எனப்படும் விதாரி கஷாயம் மேற்சொன்னபடியே எடுக்கலாம்.

* நெருஞ்சில் முள் + சதாவரி (தண்ணீர் விட்டான் கிழங்கு) இரண்டையும் 1 டம்ளர் பால், 4 டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆக குறைந்தவுடன் இறக்கி, அதை காலை, மாலை இருவேளையும் அல்லது இரவு படுக்கு முன் எடுக்கலாம். சந்திரபிரபா வடி, கைஷேநர குக்குலு எனப்படும் மாத்திரைகள் வலியை கட்டுப்படுத்தும்.

மேலே பூசுவதற்கு

பிண்டத்தைலம் மேலே பூசி, 1 மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். காஞ்சிரை வேரை கஷாயமாக்கி, வலி உள்ள இடங்களில் தாரா செய்வதுபோல ஊற்ற வேண்டும். (அரை மணிநேரம்) அத்தி, ஆல், அரசு, இத்தி ஆகிய மரப்பட்டைகளை கஷாயம் வைத்து மேற்சொன்னபடி செய்ய வேண்டும்.
கழிவு வெளியேற்றம்

திரிபலாசூரணம் உள்ளே சாப்பிடவும்

கழிவுகளை வெளியேற்றி, தோஷங்களை சமனப்படுத்தி ரசாயனம் ஆக செயல்படும்.

யூரிக் அமிலம் நீண்ட காலம் உடலில் தங்கும்போது, அவை படிகங்களாகி விடுகின்றன. உடலில் பிற கழிவுகள் தேங்கி விடுவது தான் நோய்க்கு முக்கிய காரணம். ஆகவே கழிவுகளை வெளியேற்றுவதுதான் சிகிச்சையின் முதற்படி ஆகும். தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் விரையேச்சனம் (பேதி) எடுப்பது நல்லது.

உள்ளே மருந்து சாப்பிடுவது, பாதிக்கப்பட்ட இடங்களில் தைலம், கஷாயம் பூசுவது இவற்றோடு சரியான உணவு முறை மாற்றம், சரியான வாழ்க்கை முறை மாற்றம் ஆகியன மிகவும் அவசியமாகும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker