வாழ்க்கை துணைக்கு தவறான தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
பொதுவான சில அறிகுறிகளை வைத்து அந்த குடும்பத்தில் (ஆணுக்கோ, பெண்ணுக்கோ) மூன்றாவது நபரின் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
கண்கள் உண்மையை உணர்த்திவிடும் தன்மை பெற்றவை. திருட்டு நட்புகளை புதைத்துவைத்தால் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். அதனால்தான் ஆத்மாவின் வாசலாக கண்களை வர்ணிக்கிறோம். கண்களை மனசாட்சியின் கண்ணாடி என்றும் சொல்கிறோம். வாழ்க்கைத் துணை, உங்கள் கண்களை நோக்கி பேச வேண்டும். முகத்துக்கு நேராக பார்த்து பதிலளிக்கவேண்டும். சிலர் குற்ற உணர்ச்சிகள் கண்களில் வெளிப்படாமல் இருக்க கூடுதலாக நடிக்கவும் செய்வார்கள். தவறான நட்புவைத்திருக்கும் ஆணோ, பெண்ணோ தன் இணையோடு வெளி இடங்களுக்கு வரும்போது, மற்றவர்களை அதிகம் கவர முயற்சிப்பார்கள். அதாவது தாங்கள்தான் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழும் பொருத்தமான ஜோடி என்று காட்டிக்கொள்வார்கள். பொது இடத்தில் இணையோடு சிரித்து சிரித்து பேசுவார்கள். சந்தோஷ சிலுமிஷ சேட்டைகள் வழியாகவும் அடுத்தவர்களை கவர்வார்கள்.
குடும்ப நலனுக்கு ஆதாரமான மிகப்பெரிய செல்வம் அன்புதான். சேர்த்து வைத்திருக்கும் அன்பை எல்லாம் வீட்டில் தம்பதிகள் தங்களுக்குள் செலவிடும்போது அங்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் வீட்டிற்கு வெளியே இன்னொரு உறவை ஏற்படுத்திக்கொள்ளும்போது அந்த புதிய நபரிடம் அன்பை செலவிட்டுவிட்டு, காலியான நிலையில் அவர் வீட்டிற்கு வந்து சேர்வார். வீட்டில் இருக்கும் தனது இணையிடம் செலவிட அவரிடம் அன்பு இருக்காது. அதனால் வீட்டில் கோபதாபங்களும், எரிச்சலும், விரக்தியும் ஏற்படும். திருமணத்திற்கு பின்பு ஆணோ, பெண்ணோ மூன்றாம் நபருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்போது `தப்பு செய்துவிட்டோமே’ என்ற குற்ற உணர்ச்சியும், `நாம் செய்யும் தப்பு வெளியே தெரிந்துவிடுமோ’ என்ற பயமும் ஏற்படும். இரண்டும் சேர்ந்து அவரிடமிருந்து நிம்மதியை பறித்துவிடும்.
அதே நேரம் தனது திருட்டுத்தனம் வெளியே தெரியாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம்போட்டு, தனது இணையிடம் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றிக்கொண்டிருப்பார்கள். அதாவது, அளவுக்கு அதிகமாக தனது இணையிடம் அன்பு பாராட்டுவார்கள். மற்றவர்கள் பார்வையில் படும்படி அவர் மீது அளவு கடந்த அக்கறையை வெளிப்படுத்துவார்கள். `இப்படிப்பட்ட பெண்ணை நாம் சந்தேகப்படலாமா?’ என்ற கேள்வி, அவருக்குள் எழும்நிலையை உருவாக்கிவிடுவார்கள்.
இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் தவறான தொடர்பின் வெளிப்பாடு என்ற இறுதியான கருத்து ஓட்டத்திற்கு சென்றுவிடாதீர்கள். இப்படியும் இருக்கலாம் என்பதுதான் இதன் சாராம்சம். இருந்தால் என்ன செய்வது? அன்பால் திருத்திக்கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். பொறுமை, பக்குவத்தோடு செயல்பட்டால் அது முடியும். மாறாக, தங்கள் குடும்பத்திற்குள் மூன்றாம் நபரின் தலையீடு எந்த விதத்திலும் உருவாகிவிடாத அளவுக்கு தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.