மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் யோகமுறைகள்
![மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் யோகமுறைகள் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் யோகமுறைகள்](https://img.maalaimalar.com/Articles/2021/Feb/202102170744050463_Tamil_News_Yoga-practices-that-help-keep-the-mind-and-body-healthy_SECVPF.gif)
மூச்சு, மனித உயிர்களுக்கு இன்றியமையாதது. ஒரு மனிதனுடைய ஆயுட் காலம் அவன் உள் இழுத்து வெளியே விடும் மூச்சின் வேகத்தை பொருத்து அமைகிறது. அவசர அவசரமாக மூச்சை உள்இழுத்து வெளிவிடுவதில் உடலுக்கு பலன் இல்லை. மாறாக உடல் நலனுக்கு கேடுதான் விளையும்.
நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கு குறைவாக மூச்சை உள் இழுத்து அதிக நேரம் தக்க வைத்து பிறகு வெளியேவிடவேண்டும். அதற்கான பயிற்சிதான் பிராணாயமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி. இதனை தினமும் செய்துவந்தால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர்வாழலாம்.
பிராணாயம பயிற்சியால் நுரையீரலின் காற்றை உள்ளிழுக்கும் திறனும், ரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறனும் அதிகரிக்கிறது. சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது. அதோடு நினைவாற்றல் பெருகும். நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகும். தேவையற்ற கொழுப்பு குறையும். சிந்திக்கும் திறன் பெருகும். உடல் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். பிராணாயம மூச்சுப் பயிற்சியை முறையாக கற்று, அன்றாடம் செய்துவரவேண்டும்.
பிரத்தியாகாரம்
மனமானது, புலன்கள் வாயிலாக செயல்படுகிறது. நாம் பலநேரங்களில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் வேலைகளை செய்கிறோம். அதனால் செயல்கள் பாதிக்கப்படும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்களை செய்ய, மனதை பண்படுத்தும் பயிற்சிதான் பிரத்தியாகாரம். நாம் உடலில் உள்ள ஐம்புலன்களைக்கொண்டு பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவற்றை உணர்கிறோம். புலன்களின் இயக்கம் நமக்கு நன்மையும் செய்யும். தீமையும் செய்யும். கண்போன போக்கில் மனம் போகக்கூடாது, வாயில் வந்ததைப் பேசக்கூடாது. காதில் விழுந்ததை அப்படியே நம்பக்கூடாது. ஒவ்வொரு செயலை செய்யும்போதும் நம் புலன்களில் முழு கவனத்தையும் செலுத்தி நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்யவேண்டும். அதற்கான பயிற்சியை பெறுவது சிறந்தது.
தாரணை
இது முக்கியமானது. நாம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் கவனத்தை செலுத்தினால், நமது கவனம் சிதறடிக்கப்படும். அதனால் எந்த வேலையும் திருப்தி தராது. அதனால் ஒரே வேலையில் முழுகவனத்தையும் செலுத்தும் பயிற்சியை நாம் பெற்றால் அந்த வேலை திருப்தியாக முடிந்துவிடும். அப்படி மனதை ஒருமுகப்படுத்து வதற்கு பெறும் பயிற்சிதான் தாரணை.
தியானம்
மனதில் எண்ணங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவைகளில் பெரும்பாலானவை பயனற்றவைகளாக இருக்கும். பலவிதமான எண்ணங்கள் உருவாகும்போது மனது அலைபாயும். மனதில் எண்ணங்களை உருவாக்குவது ஐம்புலன்கள். புலன்களை கட்டுப்படுத்தி மனதில் தேவையற்ற எண்ணங்கள் உருவாகாத அளவுக்கு, மனதை ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதுதான் தியானம்.
தியானம் செய்பவர்களது வலது மூளையும் இடது மூளையும் சிறப்பாக ஒன்றிணைந்து செயல்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தியானம் மேற்கொள்ளும்போது, மன அழுத்தத்திற்கு தொடர்புடைய சைட்டோகின் எனும் மூலக்கூறுகளின் செயல்பாடு நின்றுபோகும். அதன் மூலம் மனதில் அமைதி தோன்றும்.
சமாதி
மனதை ஒருநிலைப்படுத்தும் இறுதி நிலை இது. மனித மனம் நோய்களை உருவாக்கும் முக்கிய களமாக இருக்கிறது. அனைத்து துன்பங்களையும் நாம் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோதான் அனுபவிக்கிறோம். எதையும் எதிர்கொள்ளும் அளவுக்கு மனபலத்தை அதி கரித்துக்கொள்ள சமாதி நிலை உதவுகிறது.
போட்டி, பொறாமை, ஆசைகள் நிறைந்த இந்த உலகத்தில் மனிதர்களிடம் மன அழுத்தம், மன உளைச்சல், பழிவாங்கும் எண்ணம், விட்டுக் கொடுக்காத தன்மை, புரிதலின்மை, வன்முறை, முறையற்ற பாலியல் நடத்தைகள் போன்றவைகள் உருவாகின்றன. அவைகள் உருவாகாமல் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோக பயிற்சிகள் உதவும்.
நோய் இல்லாமல் உடலைப் பேணி பாதுகாக்க சித்தர்கள் வகுத்து அளித்துள்ள தின ஒழுக்கம், கால ஒழுக்கம், உணவு முறைகள், காயகல்ப முறைகள் மற்றும் மனதை செம்மையாக்கும் யோக பயிற்சிகளை பின்பற்றினால் ஆரோக்கியமான மகிழ்ச்சியான பிணி இல்லாத பெருவாழ்வு வாழலாம்.