அழகு..அழகு..புதியவை
மறந்தும் இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க… இல்லன்னா வருத்தப்படுவீங்க..
நாள்முழுவதும் உழைத்து களைத்த உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், வியர்வையால் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்கவும் மேற்கொள்ளும் அன்றாட வழக்கம் தான் குளியல். முன்பெல்லாம் வாளியில் நீரை நிரப்பில் அந்நீரில் குளிப்போம். ஆனால் தற்போது அனைத்து வீடுகளில் ஷவர் உள்ளது. ஷவரில் குளிக்கும் போது நாம் செய்யும் சில தவறுகளால் நமது தலைமுடி மட்டுமின்றி சருமமும் மோசமாக பாதிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
ஆம், குளிக்கும் போது நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் தான், பலர் முடி வறட்சி, முடி வெடிப்பு, சரும வறட்சி, பருக்கள் மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இப்போது குளிக்கும் போது நாம் தவிர்க்க வேண்டிய மற்றும் தவறாமல் பின்பற்ற சில விஷயங்களைக் காண்போம்.
மிகவும் சூடான நீரில் குளிப்பது
சிலருக்கு மிகவும் சூடான நீரில் குளிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இப்படி மிகவும் சூடான நீரில் குளித்தால், சரும மிகவும் வறட்சி அடைவதோடு, தலைமுடியில் உள்ள ஈரப்பசை முற்றிலும் நீங்கி, முடி வறண்டு சொரசொரவென்று மாறிவிடும்.
கடுமையாக முடியை தேய்த்து குளிப்பது
சிலர் தலைக்கு குளிக்கும் போது, தலையில் உள்ள அழுக்கு போக வேண்டுமென்று ஷாம்புவைக் கொண்டு தலைமுடியை மிகவும் கடுமையாக தேய்ப்பார்கள். இப்படி தேய்ப்பதால், தலைமுடியில் சிக்கல்கள் அதிகரித்து விடுவதோடு, தலைமுடியும் உதிர ஆரம்பித்துவிடும்.
கண்டிஷனரைத் தவிர்ப்பது
நம்மில் பலர் கடைகளில் ஷாம்புவிற்கு பின் பயன்படுத்த வேண்டுமென்று விற்கப்படும் கண்டிஷனர்களை வாங்கிப் பயன்படுத்துவதில்லை. இதற்கு காரணம் கண்டிஷனர்களின் உண்மையான பயன் என்னவென்று தெரியாதது கூட காரணமாக இருக்கலாம். உங்களின் முடி வறண்டு போகாமலும், உடைந்து போகாமலும் இருக்க வேண்டுமானால், தலைக்கு ஷாம்பு போட்ட பின், தலைமுடிக்கு கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.
பாடி டவலை தலைமுடிக்கு பயன்படுத்துவது
பலரும் குளித்த பின் உடலைத் துடைக்கப் பயன்படுத்தும் டவலைக் கொண்டு தலைமுடியைத் துடைப்பார்கள். ஆனால் உடலைத் துடைக்கப் பயன்படுத்தும் டவலில் உள்ள இழைநார்கள், தலைமுடியை மோசமாக உடையச் செய்யும். எனவே தலைமுடிக்கு எப்போதும் தனியாக ஒரு மென்மையான துணியைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இதனால் முடி உடையாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
தலைமுடியை அடிக்கடி அலசாமல் இருப்பது
தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், வெப்பம், வியர்வை போன்றவற்றால் தினமும் தலைமுடியில் அழுக்குகள் அதிகம் சேர்கிறது. இப்படி சேரும் அழுக்குகளை அவ்வப்போது நீக்காவிட்டால், தலைமுடி அதன் ஆரோக்கியத்தை இழந்து உதிர ஆரம்பித்துவிடும். எனவே வாரத்திற்கு 2-3 முறை தலைமுடியை அலச முயற்சி செய்யுங்கள்.
கடுமையாக சருமத்தை தேய்ப்பது
குளித்த பின் பலர் சருமத்தில் உள்ள ஈரத்தைப் போக்க துணியால் கடுமையாக துடைத்தெடுப்பார்கள். சருமமானது தலைமுடியை விட மிகவும் சென்சிடிவ்வானது. ஆகவே எப்போதுமே சருமத்தை மென்மையாக ஒத்தி எடுத்து ஈரத்தைப் போக்குங்கள். இல்லாவிட்டால் சருமத்தில் வறட்சி, தடிப்புகள் போன்றவை ஏற்படும்.
உடலுக்கு போடும் சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவது
உடலில் உள்ள அழுக்குகளை நீக்கப் பயன்படுத்தும் சோப்பை முகத்திற்கும் பயன்படுத்தும் போது, அது முகச் சருமத்தின் pH அளவை மாற்றிவிடும். பின் முகத்தில் உள்ள சருமத் துளைகள் திறந்து, பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
முகத்தை அடிக்கடி கழுவுவது
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே முகத்தைக் கழுவ வேண்டும். அதுவும் முகத்தில் எண்ணெய் பசை மற்றும் அழுக்கு அதிகம் இருந்தால் மட்டுமே இத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும். அதற்கு மேல் கழுவினால், முகச் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேறிவிடும்.