கூந்தலின் அடர்த்தி குறைந்து முன் நெற்றி அழகைக் கெடுக்கிறதா? இதை முதலில் ஃபாலோ பண்ணுங்க..
பெண்கள் ஒவ்வொரு முறை கண்ணாடியை பார்க்கும் போதும் அவர்களுக்கு கவலை தரக்கூடிய ஒரு விஷயம் அவர்களின் கூந்தல். பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி முடி உதிர்தல் ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. மேலும் முடி உதிர்வதால்தலைமுடியின் அளவு நிமிடத்தில் குறைந்து வருகிறது என்று அர்த்தம்.
மெல்லிய கூந்தல் பெண்களின் ஒரு சிறந்த சிகை அலங்காரத்திற்கான விருப்பங்களை குறைக்கிறது. கூந்தல் நீளமோ குறைவோ அடர்த்தி இல்லையென்றால் குறையாகவே தென்படும். சிலருக்கு கூந்தல் நீண்டு இருந்தாலும் ஒல்லியாக இருக்கும். பலவிதமான ஷாம்புகளை உபயோகித்தாலும் கூந்தல் உதிர்வது நிக்காது. மேலும் கூந்தல் மெல்லியதாக மாறிவிடும். ஒருவர் அடர்த்தியான கூந்தலை பெற விரும்பினால், அதற்கு சில ஆரோக்கியமான வழிகளை மட்டும் பின்போற்றினால் போதும்.
1. எண்ணெய் (Oiling) : சிலர் தங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதை விரும்புவதில்லை. ஆனால் கட்டாயம் எண்ணெய் தடவ வேண்டும். தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடிக்கு ஒரு சிறிய மசாஜ் தருவதால் முடிக்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், தலையில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேலும் கருவேப்பிலை எண்ணெய்யை நீங்கள் தினசரி உங்கள் தலைமுடியில் தடவி வந்தால், கருமையான அடர்த்தியான கூந்தலை நீங்கள் பெறலாம். முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான கூந்தல் பெற கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, நெல்லிக்காய், கருஞ்சிரகம், செம்பருத்தி இலைகள், வெந்தயம், கற்றாழை இதழ் ஆகியவற்றை எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைத்து, அந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தலாம்.
2.நெல்லிக்காய் (Consume Amla) : பல முடி பிரச்சினைகளுக்கு நெல்லிக்காய் எப்போதுமே ஒரு தீர்வாக இருந்து வருகிறது. இது முடி நரைப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காயை நீங்கள் சாப்பிட்டு வந்தால் கூந்தல் வளர்ச்சி மட்டுமல்லாது உடல் ஆரோக்கியமும் மேம்படும். நெல்லிக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், சோடியம், மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
இது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் நெல்லிக்காய் எண்ணெய்யை கூட தலைமுடிக்கு தடவலாம். கையளவு நெல்லிக்காய் மற்றும் 5 அல்லது 6 செம்பருத்தி இலையை பொடியாக நறுக்கி அவற்றை ஒரு கப் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து சூடுபடுத்துங்கள். 20 நிமிடம் குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்திய பின் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். எண்ணெய் ஆறிய பின் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதனை தடவி வந்தால் ஒரு மாதத்தில் மிக அடர்த்தியாக முடி உங்களுக்கு வளரும்.
3. கற்றாழை (Aloe Vera) : முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த பலர் கற்றாழை பயன்படுத்துகிறார்கள். அது உண்மையில் உங்களுக்கு பலனளிக்கும். கற்றாழையை உச்சந்தலையில் தடவுவதால் உங்கள் தலைக்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனால், முடி வளர்ச்சியை அதிகரிக்கும். கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை அலசினால் போதும். இது உங்கள் கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பது மட்டுமின்றி மிருதுவாகவும் மாற்றுகிறது.
4. தினமும் ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டாம் (Do not shampoo every day) : இந்த நவீன உலகத்தில் ஷாம்பு என்பது அன்றாடம் தலைக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக மாறிவிட்டது. ஆனால் அதனை வாரத்தில் எதனை முறை பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வரம்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஷாம்பு போட்டு தலைக்கு குளிப்பது ஒரு சிறந்த யோசனையாக தோன்றவில்லை. அதில் உள்ள ராசாயனம் உங்கள் கூந்தலின் உதிர்வுக்கு காரணமாக அமைகின்றன. வாரம் இரண்டு முறை ஷாம்பு பயன்படுத்தினால் போதுமானது. நீங்கள் ஷாம்பு பயன்படுத்தும் போது நேரடியாக பயன்படுத்தாமல் முதலில் ஒரு குவளையில் ஷாம்புவை ஊற்றி அதில் தண்ணீர் சேர்த்து நன்கு நுரை வரும்வரை அடித்துவிட்டு பயன்படுத்தலாம்.
5. சீரான உணவு: (Balanced diet) : ஒருவர் காலை எழுந்தது முதல் தூங்கும் நேரம் வரை எதைச் சாப்பிட்டாலும், அது அவர் உடலின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் அதிக புரதத்தை சாப்பிடுவதிலும், உங்கள் உணவை சமநிலைப்படுத்துவதிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை தினமும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.