ஆரோக்கியம்புதியவை

நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் ஜிம்முக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஊரடங்கால் ஏற்பட்ட ஐந்து மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யும்போது, தசைப்பிடிப்பு, கைகால்களை நீட்டி மடக்க முடியாத நிலை, உடல் முழுவதும் வலிபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக இளைஞர்கள் பலர் கூறுவதைக் கேட்க முடிகிறது. ஜிம்முக்குச் சென்று வொர்க்அவுட் செய்துகொண்டிருந்த ஒருவர், நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் செல்லும்போது அவர் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..? என்று அறிந்து கொள்ளலாம்.

சிறிது காலம் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது தளர்வடைந்துள்ள தசைகள் மீண்டும் பழையபடி ஓர் ஒழுங்கு முறையில் கட்டமைக்கப்படும். இதனால் தசைப்பிடிப்பு, உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஐந்து மாதங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்கு வந்து வொர்க்அவுட் செய்ய ஆரம்பித்தவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் வருவது இயல்புதான். அதனால் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. உடற்பயிற்சி செய்யச் செய்ய மூன்று அல்லது நான்கு நாள்களிலேயே இவை சரியாகிவிடும். ஏற்கெனவே உடற்பயிற்சி செய்து இடையில் நிறுத்தி மீண்டும் தொடங்கும்போது எங்கு பயிற்சியை நிறுத்தினீர்களோ அங்கிருந்து தொடங்காமல், பயிற்சியை ஆரம்பத்திலிருந்தே மெதுவாகத் தொடங்க வேண்டும்.

ஜிம்மில் ஏற்கெனவே யாராவது பயன்படுத்திய உடற்பயிற்சி உபகரணங்களை நீங்கள் பயன்படுத்த நேரலாம் என்பதால் கையுறைகள் (gloves) அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வொர்க் அவுட் செய்யும்போது உடலில் சுரக்கும் வியர்வை காரணமாக நீங்கள் அணிந்திருக்கும் உடை நனைந்துவிட்டால் அதை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வோர் அவர்கள் செய்யும் வொர்க்அவுட்டுக்கு தகுந்தாற்போல தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஜிம்முக்குச் செல்வோர் தினமும் சராசரியாக 4 – 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கடினமாக உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலிலிருந்து அதிகளவில் வியர்வை வெளியேறும் என்பதால் அதைச் சமன் செய்யக்கூடிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில், டீஹைட்ரேஷன்’ (Dehydration) எனப்படும் உடல் வறட்சி ஏற்பட்டு மயக்கம், சோர்வு போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்.

தினமும் வொர்க்அவுட் செய்பவர்கள் தினமும் 6 – 7 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டியது அவசியம். காலை, மாலை இருவேளையும் ஜிம்முக்குச் செல்பவர்கள் 8 மணி நேர உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பகல் பொழுதில் கடுமையான உடற்பயிற்சி செய்வோர், இரவில் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கத் தவறினால் சோர்வு, தலைச்சுற்றல், கவனமின்மை உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் வொர்க்அவுட் செய்வோர் தங்களின் உறக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாத ஒன்று.

ஜிம் சென்றுகொண்டிருப்பவர்களுக்குச் சாதாரணமாகவே புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. நோய் எதிர்ப்புத் திறனை புரதச்சத்து அதிகரிப்பதால் 60 கிலோ உடல் எடையுள்ள ஒருவர், ஒருநாளைக்கு 100 – 120 கிராம் அளவிலான புரதத்தை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதை முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவு வழியாகவோ, தானியங்கள் போன்ற சைவ உணவு வழியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் முறையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இயங்க வேண்டியது அவசியம். உங்களுக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னைகளை நீங்கள் பயிற்சிபெறும் ஜிம் மாஸ்டரிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனெனில், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய்போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் பிரச்னைக்குத் தகுந்தாற்போல உடல் எடையை அதிகரிக்க அல்லது குறைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியாளரின் வழிகாட்டுதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகளால் தோள்பட்டை, எலும்பு, மூட்டுத் தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.

Read Also : பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker