குழந்தைப்பருவ நரை: காரணமும், தீர்வும்…
வயது அதிகரிக்க தொடங்கும்போது தலைமுடியில் நரை முடி எட்டிப்பார்ப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் சிலருக்கு குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி துளிர்விட தொடங்கி விடுகிறது. முடி கருமை நிறத்தில் காட்சி அளிப்பதற்கு மெலனின் எனும் நிறமிதான் முக்கிய பங்கு வகிக்கிறது.
வயது அதிகரிக்கும்போது அந்த நிறமியின் சுரப்பு தடைபடும். அல்லது அதன் வீரியம் குறைய தொடங்கும். அதன் காரணமாக முடி வெள்ளை நிறத்திற்கு மாறலாம். வைட்டமின்- பி12 குறைபாடும் முடியின் வெள்ளை நிறத்திற்கு மற்றொரு காரணமாகும்.
கால்சியம், தைராய்டு போன்ற குறைபாடுகளும் முடியின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும். குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி தென்பட தொடங்கினால் அதற்கு மரபணுக்கள் முக்கிய காரணமாக அமையலாம். பெற்றோருக்கோ அல்லது அவர்களின் தலைமுறையினருக்கோ இந்த பிரச்சினை இருந்தால் அது மரபு ரீதியாக பின் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் அதிகமாக உடலில் படுவது, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவையும் வெள்ளை முடி வளர்வதற்கு வழிவகுத்துவிடும்.
கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் வைட்டமின்-பி12, கால்சியம் அதிகம் கொண்ட உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
ஷாம்பு, கண்டிஷனர்கள் கூந்தலுக்கு உகந்ததா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மருதாணி, நெல்லிக்காய், செம்பருத்தி போன்ற மூலிகை பொடி வகைகளை கூந்தலுக்கு பயன்படுத்திவரலாம்.