இந்த நேரங்களில் கண்டிப்பாக ‘மேக்கப்’ போடாதீங்க…
பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் மேக்கப்பை தவிர்ப்பது சருமத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக ஜிம்முக்கு செல்லும்போது மேக்கப்பை தவிர்க்க வேண்டும். அப்போது வியர்வை வழிவதால் அதில் இருக்கும் ரசாயன கலவை சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். உடல் உழைப்பு கொண்ட வேலைகளை செய்யும்போதும் மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும்.
லேசர் முடி சிகிச்சைக்கு பிறகு உடனே மேக்கப் போடுவது நல்லதல்ல. சருமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 48 மணி நேரத்திற்கு மேக்கப் எதுவும் போடக் கூடாது. சரும அலர்ஜி கொண்டவர்கள் முற்றிலும் மேக்கப்பை தவிர்க்க வேண்டும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கூடுமானவரை மேக்கப்பை தவிர்த்துவிடுவது நல்லது.
ஒப்பனை செய்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் லேசாக மேக்கப் செய்து கொள்ளலாம். நீச்சல் குளத்திற்கு செல்லும்போது மேக்கப் போடக்கூடாது. ஏனெனில் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின், அழுக்கு, பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அவை மேக்கப்பில் கலந்து சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வீக்கம், அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உருவாகும்.
மேக்கப் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். ஒருவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை மற்றவர்கள் பயன் படுத்தக்கூடாது. மேக்கப் சாதனங்கள் வைத்திருக்கும் பேக்கை திறந்து வைக்கக்கூடாது. அதற்குள் பாக்டீரியாக்கள் எளிதாக உள்ளே நுழைந்து சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். மேக்கப் பிரஷ், ஸ்பாஞ்சுகளை தினமும் சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் சாதனங்களை பயன் படுத்துவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். எண்ணெய் தன்மை கொண்ட மேக்கப் சாதனங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.