திருமண பந்தத்தில் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அற்புதமான உறவை உருவாக்கும் அல்லது சிதைக்கும் தன்மை வார்த்தைகளுக்கு உண்டு. அதனால் மனைவியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும்.
ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் ஒருபோதும் தவறாக மதிப்பிடக்கூடாது. ஏதாவதொரு வகையில் அவரவர் தரப்பில் நியாயம் இருக்கும். அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதை விடுத்து மனைவியின் உணர்வுகளை கணவர் கேலி, கிண்டலாக பாவித்துவிடக்கூடாது. விளையாட்டுக்காக கூட உணர்வுகள் விஷயத்தில் விளையாடக்கூடாது.
குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ, நல்ல விஷயங்கள் நடக்க இருந்தாலோ மனைவியிடம் அதுபற்றி விளக்கமாக பேச வேண்டும். மூன்றாம் நபரிடம் பேசுவது போல் மேலோட்டமாக பேசக்கூடாது. மனைவியின் கருத்தை கேட்க யோசிக்கக்கூடாது. குடும்பத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுவிடக்கூடும்.
விவாகரத்து என்ற வார்த்தைதான் குடும்பங்களை சிதைக்கும் காரணியாக இருக்கிறது. உறவுக்குள் நிச்சயமற்ற தன்மையையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும். ‘சைலெண்ட் தெரபி’ எனப்படும் அமைதி சிகிச்சைதான் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி. இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டால் சில மணிநேரங்கள் விலகி இருப்பது அவசியம். அப்போது மனதை அமைதிப்படுத்தி நிதானமாக யோசித்து பார்ப்பதுதான் பிரச்சினையை குறைக்கும்.
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மன உளைச்சலில் இருக்கும்போது மனைவி ஆறுதலாக பேச வரும்போது எரிச்சல் அடைந்து வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. ‘ஒண்ணுமில்லை, நீ சும்மா இருக்கியா? உன் வேலையை மட்டும் பார்’ என்பது போன்ற வார்த்தைகள் மனைவியை மனம் நோகடிக்க வைத்துவிடும். மனைவியிடம் பேச முடியாத மனநிலையில் இருந்தால், ‘நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க விரும்புகிறேன். தனிமை சூழல் எனக்கு தேவைப்படுகிறது. பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று பக்குவமாக சொல்ல வேண்டும்.
கணவன்-மனைவி இடையேயான உரையாடலில் எந்த ஒரு சூழ்நிலையிலும் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. எத்தகைய சண்டை-சச்சரவுகள் தோன்றினாலும் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க பழக வேண்டும். அப்போது விவாதம் தீவிரமாவதாக உணர்ந்தால் கணவர் பேசாமல் அமைதி காப்பதுதான் நல்லது. பிறகு பேசிக்கொள்ளலாம் என்று ஒதுங்கி இருப்பது மேலானது. அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டினால் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்திவிடும். விவாகரத்து சிந்தனைக்கு வழிவகுத்துவிடும்.
மற்றவர்களுடன் மனைவியை ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக துணையின் செயல்பாடுகளில் இருக்கும் குறைகளை வெளிப்படையாக விமர்சனம் செய் வது தவறில்லை. அதேநேரத்தில் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் மனநிலைக்கு ஆளாகிவிடக்கூடாது. தவறுகளை சரிப்படுத்தும் வாய்ப்பை கணவர் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக மனைவி கருத வேண்டும்.
நண்பர்கள், உறவினர்களிடம் குடும்ப விஷயங்களை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. தம்பதியர் தங்களுக்குள் சாதாரணமாக கருதும் விஷயங்கள் மூன்றாம் நபர்கள் மூலம்தான் பிரச்சினையாக உருவெடுக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமானது.