கொரோனாவால் அங்கே இங்கே அசைய முடியாமல் எல்லோரும் ஒன்றாக வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்படும் மோதல் உலகம் முழுவதுமாக அதிகரித்திருப்பதாக தகவல். தம்பதிகளிடையே உறவு மேம்பட்டால்தான் மோதல் இல்லாமல் இருக்கும். உறவு மேம்பட, நீங்கள் உங்கள் கணவர் மனதில் எந்த அளவுக்கு இடம் பிடித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அளவிட இதோ இங்கே தரப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:-
நீங்கள் போக வேண்டும் என்று விரும்பிய இடத்துக்கு, ஒரு வார கால சுற்றுலா செல்ல உங்கள் தோழிகள் திட்டமிடுகிறார்கள். ஆனால் உங்கள் கணவருக்கு அதில் விருப்பமில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
அ. ‘ஒரு வார காலமா? அவ்வளவு நாட்கள் ஒதுக்க முடியாது. எங்கள் இருவருக்குமே அது சாத்தியமில்லை’ என்று நாசுக்காக ஒதுங்கிவிடுவேன்.
ஆ. உடனடியாக சுற்றுலாவுக்கு ஒப்புக்கொள்வதோடு, கணவரையும் சுற்றுலாவுக்கு வர ஊக்கப்படுத்துவேன்.
இ. கணவர் வந்தாலும், வராவிட்டாலும் நான் மட்டும் தனியாக சுற்றுலா கிளம்பிவிடுவேன்.
உங்கள் உறவினர்கள், நண்பர்கள் கூடும் இடத்தில் உங்களைவிட உங்கள் கணவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதை விரும்புவீர்களா?
அ. விரும்பமாட்டேன். ‘என்னைவிட உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பது எனக்கு பிடிக்கவில்லை’ என்று கூறிவிடுவேன்.
ஆ. என் கணவருக்கு அங்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கிறது என்று கவனிப்பேன். ஆனால் அவசியப்பட்டால் ஒழிய அதில் தலையிட மாட்டேன்.
இ. இதற்கெல்லாம் அலட்டிக்கொள்கிற ஆள் நானில்லை. கணவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தால் கிடைக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.
உங்கள் உறவினர்களில் எத்தனை பேருக்கு உங்கள் கணவரைப் பற்றி நன்கு தெரியும்?
அ. அனைவருக்குமே அவரைப் பற்றி தெரியும்.
ஆ. எனது குடும்பத்தினருக்கும், சில நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இ. என் கணவரைப் பற்றி முழுமையாக புரிந்தவர்கள் யாரும் இல்லை.
உங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கு நெருக்கமானவர்களின் கருத்து என்ன?
அ. ‘பொருத்தமான துணை’ என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆ. ‘சுதந்திர விரும்பி’ என்று பலர் கூறியிருக்கிறார்கள்.
இ. வெளியே சொல்கிற மாதிரி அதில் திருப்தியான விஷயம் இல்லை.
நீங்கள் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டால், அது உங்கள் கணவருக்கும் சேர்த்துதான் என்று நினைப்பீர்களா?
அ. நிச்சயமாக. நான் அப்படித்தான் நினைப்பேன்.
ஆ. மிகவும் நெருக்கமானவர்கள் விருந்துக்கு அழைத்தால், அதை இருவருக்கும் சேர்த்துத்தான் என்று நினைத்துக்கொள்வேன். சும்மா பெயரளவுக்கு அழைக்கிறார்கள் என்றால், இரண்டு பேரில் யார் சொல்ல வேண்டும் என்று தெளிவுபடுத்திக்கொள்வேன்.
இ. கணவரை அழைத்துவரும்படி கூறாவிட்டால், நான் மட்டுமே செல்வேன்.
உங்களின் பள்ளிக்காலத் தோழர்கள் அல்லது தோழிகள் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அந்த சந்திப்புக்கு உங்கள் கணவரையும் நீங்கள் அழைத்துச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?
அ. எனது பள்ளிக்காலத் தோழர்கள், தோழிகளை எனது கணவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசைதான் அதற்கான காரணமாக இருக்கும்.
ஆ. பள்ளிக்காலத் தோழர்கள் அல்லது தோழிகளில் எத்தனை பேர் ஜோடியை அழைத்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் முடிவெடுப்பேன். எனது பள்ளிக்கால தோழமை பற்றி எனது கணவர் தெரிந்து கொள்ளவேண்டியது அவ்வளவு அவசியமில்லை என்று நினைப்பேன்.
இ. கணவர் தேவையில்லை. தனியாகப் போனால்தான் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்துவிடுவேன்.
உங்கள் கணவரோடு நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று இப்போது தெரிந்துகொள்ளலாம்..
பதிலில் அதிகமாக ‘அ’ என்றால்:- நிச்சயமாக இந்த கொரோனா காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் உங்களுக்குள் மோதல் வராது. நீங்கள் நெருக்கமான ஜோடிதான். அதற்காக நீங்கள் சந்தோஷப்படலாம். இன்றைய உங்கள் வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் இந்த நெருக்கத்தைத் தாண்டி இருவருக்கும் சில ஆசைகள் இருக்கும். அதை மனம்விட்டுப்பேசி இருவரும் நிறைவேற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.
அதிகமாக ‘ஆ’ என்றால்:- உங்கள் உறவில் நல்ல சமநிலை நிலவுகிறது. இதே நிலையைத் தொடர்ந்து பராமரிக்கலாம். அவ்வப்போது கணவ ரின் மனநிலையை உணர்ந்து, அவருக்கு தக்கபடி உங்களிடமும் தொடர்ந்து நல்ல மாற்றங்களை உருவாக்கி, இதே புரிதலை நிரந்தரமாக்குங்கள். இந்த கொரோனா காலம் உங்களுக்குள் நிம்மதியைத்தரும்.
அதிகமாக ‘இ’ என்றால்:- நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாவற்றுக்கும் உங்கள் கணவரைப் பிடித்துக் கொண்டு தொங்காதது நல்ல விஷயம்தான். ஆனால் திருமணத்துக்குப் பின்னும் தனிநபராக நீங்கள் விலகியே இருப்பது சரிதானா என்று யோசிக்க வேண்டும். இந்த கொரோனா காலத்தில் உங்களுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.