ஃபேஷன்புதியவை

மணப்பெண் அலங்காரத்தில் இதை மறக்காதீங்க…

திருமணத்திற்கு தயாராக இருக்கும் அனைத்து பெண்களுக்குமே மணப்பெண் அலங்கார கனவு ஒன்று மனதுக்குள் இருந்துகொண்டிருக்கும். திருமணம் பேசி முடித்து, அவர்கள் மணப்பெண்ணாகுவார்கள். முகூர்த்த நாளில் அந்த தனித்துவமான அலங்காரத்தில் ஜொலிக்க ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுகிறார்கள்.

மணப்பெண் அலங்காரத்திற்கு தயாராகும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல அழகுக்கலை நிபுணர் அளித்திருக்கும் பதில்கள்:

அலங்காரத்துக்கு தயாராகும் முன்பு மணப்பெண் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?

திருமணத்திற்கு முன்பு வழக்கமாக செய்யும் பேஷியல், கிளன் அப் போன்றவைகளை செய்தால்போதும். வழக்கத்திற்கு மாறாக முகத்தில் ஏதாவது மேக்கப் முறைகளை கையாண்டால் அது பருவோ, வேறுவிதமான பாதிப்புகளோ உருவாக காரணமாகிவிடும். அதனால் திருமணத்திற்கு முன்பு தேவையற்ற அழகுப் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. மணப்பெண் அலங்காரம் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். ஒயிட் ஹெட்ஸ் போன்றவை இருந்தால் அதையும் சுத்தப்படுத்தவேண்டும்.

மணநாள் மணப்பெண்ணுக்கு மிக முக்கியமான நாள் என்பதால் அன்று மேக்கப்பில் கூடுதலாக என்னவெல்லாம் செய்யலாம்?

மணமகளின் சருமத்தின்தன்மை மற்றும் அவரது விருப்பத்தை பொருத்தே அலங்கார முறைகளை தீர்மானிக்கவேண்டும். அழகுக்கலை நிபுணரின் தனிப்பட்ட விருப்பங் களுக்கு செவிசாய்த்துவிடக்கூடாது. முதலில் ஒரு முறை டிரையல் மேக்கப் செய்து பார்க்கலாம். மணப்பெண்ணின் முகம் மற்றும் முக உறுப்புகளின் தன்மைக்கு ஏற்ப டிரையல் மேக்கப்போட்டு நிறைகுறைகளை அறிந்த பின்பு, முழு அலங்காரத்திற்கு தயாராகலாம். மணப்பெண் அலங் காரத்தில் கூடுதலாக என்னவெல்லாம் செய்யலாம் என்பதைவிட சிறப்பாக எப்படி செய்யலாம் என்றுதான் சிந்திக்கவேண்டும்.

திருமண நாளன்று மேக்கப் அதிக நேரம் நிலைத்து நிற்க என்ன செய்யலாம்?

சீதோஷ்ணநிலை, நேரம் போன்றவைகளை கருத்தில்கொண்டு அதற்கு தக்கபடிதான் அழகுக்கலை நிபுணர் மேக்கப் செய்வார். பவுண்ட்டேஷன் ஸ்ட்ராங்காக கொடுத்து, மேக்கப் செய்து முடித்து ‘பிக்‌ஷிங் ஸ்பிரே’யும் கொடுத்தால் அதிக நேரம் மேக்கப் நிலைத்து நிற்கும்.

மணப்பெண் அலங்காரத்தில் புதிய டிரென்ட் என்ன?

காலத்திற்கு ஏற்ப டிரென்ட் மாறிக்கொண்டிருக்கிறது. இந்து மதத்தை சேர்ந்த மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் ‘டார்க்’கை கடைப்பிடிக்கிறார்கள். நியூடு லிப்ஸ் அலங்காரத்தை விரும்புகிறார்கள். கிறிஸ்தவ மணமகள்கள் நியூடு ஐ மேக்கப்பும், டார்க் லிப்ஸ் அலங்காரமும் செய்கிறார்கள். முஸ்லிம் சமூக மணப்பெண்கள் அரபிக் டச் கொண்ட மேக்கப்பை தேர்ந்தெடுக்கிறார்கள். முன்பு நீட் அண்ட் கிளன் ஆன ஹேர்ஸ்டைலை விரும்பினார்கள். இப்போது மெஸ்ஸி ஹேர்ஸ்டைலை பெண்கள் அதிகம் தேர்வுசெய்கிறார்கள்.

மணப்பெண் அலங்காரம் செய்யும்போது முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன?

அதிகம் வியர்க்கும் தன்மைகொண்ட பெண்களும், அலர்ஜியை ஏற்படுத்தும் சென்சிடிவ் ஸ்கின் கொண்ட பெண்களும் முதலிலே அழகுக்கலை நிபுணரிடம் கூறி தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் மேக்கப் போட்டு முடித்த பின்பும் தனிக்கவனம் செலுத்துவது அவசியம். அவர்களுக்கு வியர்த்தால், கைக்குட்டை வைத்து துடைத்துவிடக்கூடாது. அதற்குரிய ஸ்பான்ஞ் போன்றவைகளை அழகுக்கலை நிபுணரிடமும் கேட்டு வாங்கி பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

கண்களுக்கு எத்தகைய மேக்கப் சிறந்தது?

இப்போது கிளிட்டர் லுக்கை பெண்கள் விரும்புவதில்லை. மேட் பினிஷ் இன் ஐ ஷேடோவை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். கண்மை தீட்டும்போது ஸ்மோக்கி லுக்கை விரும்புகிறார்கள். இவை சிறிய கண்களையும் சற்று பெரிதாக்கிக்காட்டும்.

முகத்திற்கு மேக்கப் செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?

முகத்திற்கு மேக்கப் செய்யும்போது ஸ்கின் டோனுக்கு பொருத்தமான டோனை பயன்படுத்தவேண்டும். நல்ல நிறமாக தோன்ற விரும்பினால் ஒரு ஷேடை மட்டும் கூடுதலாக பயன்படுத்தலாம். யதார்த்தமான கலரைவிட அதிகமாக பளிச்சென்று காட்டினால் அது ஓவர் மேக்கப்ஆகிவிடும். சருமத்திற்கு பொருந்திவரக்கூடிய பவுண்ட்டேஷனை கொடுக்கவேண்டும். அதே ஷேடை கழுத்திற்கும், கைகளுக்கும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker