கவிதைகள்புதியவை

உனக்கானவன் நீ மட்டும்

வாழ்க்கை கவிதை

உலகம் ஒரு விந்தையான விடயம்
பெரும்பாலும் இங்கு பொதுநலவாதிகள் இருப்பதில்லை
இங்கு சுயநலமும் சூழ்ச்சியுமே அதிகம் ஆட்சியாலும் !

இரக்கத்தை எல்லோரிடத்திலும் எதிர்பார்த்தால்
ஏமாற்றம் நிச்சயமே –
கருணையும் அன்பும் கல்லறைக்குள் அடக்கமாகி
நூற்றாண்டுகள் பலவாகி விட்டன !

மீண்டும் சொல்கிறேன்
உனக்கானவன் நீ மட்டுமே !

இங்கு கைதூக்கி விட்டவர்களை காட்டிலும்
கைவிட்டவர்கள்தான் அதிகம்
ஒவ்வொருவரின் பாதங்களுக்கு கீழும்
பள்ளம் பறிக்கப்படுவதுதான் மனிதத்தின் எதார்த்தமாகிவிட்டது !

உதவிகளை ஒருபோதும் எவரிடமும் எதிர்பார்க்காதே
அதில் பெரும்பாலும் தோல்விகளையே தரும் –
உனக்கான லட்சியத்தின் இலக்கை நோக்கி
நம்பிக்கையோடு பயணிப்பதை என்றைக்குமே விடாதே !

வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வெறுப்பை மட்டும் ஓரம் வைத்து விடு
கால்கள் நடக்கும் வேகத்தில்
காலங்கள் சத்தியம் சாத்தியமாகும் !

அவமானங்களை அலட்சியங்களை
தூரம் வைக்க பழகிக்கொள்
உள்ளத்தில் உன் லட்சியத்தின் எல்லையை வைத்தே பயணி !

மீண்டும் ஒரு முறை
உனக்கானவன் நீ மட்டும் !

வாய்ப்புகளுக்கு வரையறை இல்லை
அது தினம்தோறும் உதிக்கும் சூரியன் போன்றது
முயற்ச்சிகளையே பயிற்சியாக்கிக்கொள்
விரைவில் வானம் வசப்படும்!

அவரவர் வேலைகளுக்கு அவசியம் காட்டும்
அவசரகால உலகம் இது
எவரின் ஏற்றத்திலும் அது ஈடுபாடு காட்டாது !

நாளை உன்காலம் என்பதை
உன் உள்ளத்தில் அழுத்தமாக பதிந்துவை –
ஒருநாள் இல்லாவிட்டாலும்
ஓர்நாள் உன் இலட்சியங்கள் வெற்றிபெறும் !

உனக்கானவன் நீ மட்டுமே
எதற்காகவும் எவரிடமும் கையேந்தாதே
மூச்சுவிட முடியாமல் தவித்தால் கூட
என்னால் முடியும் என்று உறுதியாக நம்பு –
வெற்றி உன் வாசல் தேடும்!

மீண்டும் ஒரு முறை
உனக்கானவன் நீ மட்டும் ………………….

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker