ஆண்களின் உடலுறவு நாட்டத்தை குறைக்கும் ‘பீர்’
தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களுக்கு உடலுறவு நாட்டம் குறைந்துபோகும். தொடக்கத்தில் அது பாலியல் வேட்கையை அதிகப்படுத்துவதுபோல் தோன்றினாலும், நாளடைவில் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி குறைந்துபோகும்.
ஆண்களின் உடலுறவு நாட்டத்தை குறைக்கும் ‘பீர்’
‘உடலுக்கு குளிர்ச்சி.. உள்ளத்துக்கு கிளர்ச்சி.. இந்த இரண்டும் சேர்ந்து ஒரே பாட்டிலில் கிடைக்கிறது’ என்று ‘பீர்’ பிரியர்கள் உற்சாகமாக சொல்கிறார்கள். கோடையில் குடித்தும் மகிழ்கிறார்கள். ஆனால் மருத்துவர்களோ, ‘அடிக்கடி பீர் பருகுவது புற்று நோயை உருவாக்கக்கூடும்’ என்ற அதிர்ச்சி தகவலை தருகிறார்கள்.
கேரளாவை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவர் தனது நண்பருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சொல்கிறார்:“அந்த நண்பர் என்னை சந்திக்க வந்திருந்தார். அவர் தினமும் பீர் பருகுவதாக சொன்னார். நான் அவரிடம், அதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டால் புற்றுநோய் வரக்கூடும் என்றேன். அதை அவர் கருத்தில்கொள்ளவில்லை. ‘பீர் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதே ஆரோக்கியத்தோடு உங்களை மீண்டும் வந்து சந்திப்பேன்’ என்று கூறிவிட்டு அவர் வெளிநாடு சென்றார்.
சில வருடங்கள் கழித்து அவர் மீண்டும் வந்தார். ஆரோக்கியத்தை பற்றி விசாரித்தபோது, நன்றாக இருப்பதாக சொன்னார். வழக்கம்போல் ஓட்டலுக்கு சாப்பிடச் செல்லலாம் என்றேன். அதற்கு அவர், ‘முன்புபோல் என்னால் எல்லா உணவுகளையும் சாப்பிடமுடிவதில்லை. கஞ்சியை மட்டுமே குடிக்க முடிகிறது’ என்றார்.
அவருக்கு நான் ‘என்டோஸ்கோபி’ பரிசோதனை செய்ய பரிந்துரைத்தேன். பரிசோதனைகளுக்கு பின்பு அவருக்கு குட்டிநாக்கு பகுதியில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை. ஒருசில வருடங்களில் இறந்துவிட்டார். இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு அவர் ‘டாக்டர் நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் சொன்னதை நான் விளையாட்டாக எடுத்துக்கொண்டதால் என் விதி விளையாடிவிட்டது’ என்று கண்ணீர் விட்டார்.
பீருக்கு நிறம் கிடைப்பதற்காக ஒருவித ரசாயனப் பொருள் சேர்க்கப் படுகிறது. அது ஆபத்தானது. தொடர்ந்து பீர் பருகும்போது அது பெருமளவு உடலில் சேர்ந்து, புற்றுநோயை உருவாக்குகிறது. இதை பெரும்பாலான பீர் பிரியர்கள் உணருவதில்லை. அதுபோல் பீரில் ஆல்கஹால் அளவும் அதிகமாக இருக்கிறது. 6 சதவீத ஆல்கஹால் என்று கூறப்பட்டாலும் அதைவிட அதிக போதைத்தன்மை அதில் உள்ளது.
மது வாய் வழியாக இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்துவிடும். மீதி 80 சதவீதம் சிறுகுடலில் போய் சேரும். சிறுகுடலுக்கு ரத்தம், ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஆனால் அங்கே வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறி, காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும்.
ஒரு சில கிராமங்களில் பிரசவமான பெண்களுக்கும், உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கும் மதுவை மருந்தாக கருதி கொடுக்கிறார்கள். அதில் சில திரவங்களை கலந்தும் தருகிறார்கள். அதன் மூலம் உடல் வலுவடையும் என்று நம்புவது தவறு.
ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றலும் குறைந்துகொண்டேபோகும்.
தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களுக்கு உடலுறவு நாட்டம் குறைந்துபோகும். தொடக்கத்தில் அது பாலியல் வேட்கையை அதிகப்படுத்துவதுபோல் தோன்றினாலும், நாளடைவில் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி குறைந்துபோகும்.
ஆண், பெண் இருபாலரிடமும் ஆண் ஹார்மோனும், பெண் ஹார்மோனும் கலந்து காணப்படும். இந்த ஹார்மோன் கணக்கை சீர்படுத்துவதில் ஈரல் பெரும் பங்கு வகிக்கிறது. ஈரல்தான் ஆண்களிடம், பெண் ஹார்மோனை கட்டுக்குள் வைக்கும். அடிக்கடி மது அருந்துகிறவர்களுக்கு ஈரல் பாதிக்கப்படுவதால், அவர்கள் உடலில் பெண் ஹார்மோன் அதிகரிக்கும். அதனால் அவர்களிடம் பெண்தன்மை மேம்பட்டு, பாலுறவு ஆர்வம் குறைந்துவிடும்.