பதின் வயதினரையும், சிறுவர்களையும் பாதிக்கும் டிஜிட்டல் சவால் விளையாட்டுகள்
டிஜிட்டல் வெளியில் இன்று உலவுகின்ற இந்த சவால் விளையாட்டுகள் பதின் வயதினரையும், சிறுவர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது.
பதின் வயதினரையும், சிறுவர்களையும் பாதிக்கும் டிஜிட்டல் சவால் விளையாட்டுகள்
பதின் வயதினரையும், சிறுவர்களையும் பாதிக்கும் டிஜிட்டல் சவால் விளையாட்டுகள்
அ டேய்…. ரூம் போட்டு யோசிப்பீங்களா? என கேட்கத் தோன்றுகிறது. அடிக்கடி முளைத்தெழும்புகின்ற இணையச் சவால்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு சவாலுக்குப் பின்பும் பல ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. ஆனாலும் மக்கள் சவால்களில் குதிக்கிறார்கள். புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் ஒன்று வந்தது. நடுங்கிக் குளிரும் அதிகாலையில், ஒரு பக்கெட் நிறைய ஐஸ் தண்ணீரை தலையில் கவிழ்க்க வேண்டும் என்பது தான் சவால். உலகெங்கும் மக்கள் சவாலை ஏற்று பக்கெட் பக்கெட்டாக தண்ணீரைத் தலையில் கவிழ்த்து புகைப்படம் எடுத்து இணைய வெளியைத் தெறிக்க விட்டார்கள். பலர் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கையில் கிடந்தார்கள். எவ்வளவு நாள் தான் ஐஸ்வாட்டர் கொட்டறது என அடுத்து நெருப்பு விளையாட்டைக் கொண்டு வந்தார்கள். ஆல்கஹால் போன்ற சட்டென தீப்பிடித்து, சட்டென அணைந்து விடுகின்ற திரவங்களை உடலில் கொட்டி தீ வைத்து பிறரை வெல வெலக்க வைப்பது இந்தப் போட்டி. பலர் இதை வெற்றிகரமாகச் செய்தார்கள். மக்கள் கூடும் இடங்களில் உடலில் நெருப்பு வைத்து, நெருப்பையும் மக்களின் அதிர்ச்சியையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார்கள். பலரை உற்சாகப்படுத்திய இந்த விளையாட்டு, பலருடைய அழகிய மேனியை கருக்கிப் பொசுக்கவும் செய்தது.
அடுத்ததாக ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கும் ஒரு சவால் வந்தது. சீறிவரும் ரெயிலுக்கிடையே, பாய்ந்து வரும் வாகனங்களுக்கிடையே, உச்சாணிக் கொம்பில், கட்டிடங்களின் அபாய விளிம்புகளில் என சாவுக்கும் வாழ்வுக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று மக்கள் செல்பி எடுத்துத் தள்ளினார்கள். ஏகப்பட்ட உயிர்களைப் பலிகொண்ட விளையாட்டாய் இது மாறிப் போனது.
48 மணி நேர சவால் என்று ஒன்று, இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்தது. பதினெட்டு மணி நேரம் காணாமல் போய்விடவேண்டும். யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டும். அது தான் சவால். பல பெற்றோரை அதிர்ச்சிக்குள் அழைத்துச் சென்ற சவாலாக இது மாறிப் போனது.
இந்த சவால்களில், சர்வதேசத்தையே நடுநடுங்க வைத்த சவால்களாக புளூவேல், மோமோ போன்ற சைக்கோ விளையாட்டுகள் ஏகப்பட்ட சிறுவர் சிறுமியர் உயிர்களைப் பலிகொண்டன. பல அரசுகள் இந்த விளையாட்டுகளைத் தடை செய்தும், எச்சரிக்கை விடுத்தும் மக்களைக் காப்பாற்றின என்று சொல்லலாம்.இப்போது கடந்த சில மாதங்களாக ‘நம்பர் நெய்பர்’ (அடுத்த எண் ) எனும் புதிய சவால் ஒன்று மெல்ல மெல்லப் பரவி வியாபிக்கத் துவங்கியிருக்கிறது. இது என்ன சவால்? சிம்பிள். நமது மொபைல் பத்து இலக்க எண்ணாக இருக்கிறது அல்லவா? அந்த பத்தாவது இலக்க எண்ணை மட்டும் மாற்றி வேறு எண் போட்டால் அவர் நமது அடுத்த எண் நபர். அவருக்கு வாட்ஸப் பண்ணுவது, மெசேஜ் பண்ணுவது நண்பராக முயற்சிப்பது தான் இந்த விளையாட்டு. அதாவது உங்கள் எண் 5-ல் முடிகிறதெனில், அந்த இடத்தில் 5-க்குப் பதில் வேறு எண்ணைப் போடவேண்டும்.
அந்த நபரிடம் தொடர்பு கொண்டு, உரையாடி, அந்த உரையாடலை அப்படியே ஸ்கிரீன் ஷாட் (திரைப்பதிவு) செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது தான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம். இந்த விளையாட்டும் பல விபரீதங்களை மெல்ல மெல்ல கொண்டு வந்து கொண்டிருக்கிறது. யாரென்றே தெரியாத நபரிடம் பேசுவதும், அவரிடம் நமது தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும் நாம் விரும்பியே ஆபத்தை விலைக்கு வாங்குவதைப் போல என்பதில் சந்தேகமில்லை. இப்படி நடந்த முயற்சிகளில் சில அநாகரிக உரையாடல்களாகவும், கொலை மிரட்டல்களாகவும், எச்சரிக்கைகளாகவும் மாறிப் போனது.
யாரென்றே தெரியாத நபருக்கு செய்தி அனுப்புவது அவரது தனிநபர் உரிமையில் தலையிடுவதாகவும் மாறிவிடுகிறது. சில நாடுகளில் இது சட்ட விரோதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக இந்த சவால் விளையாட்டுப் போர்வையில் புல்லுருவிகள் உங்களை அணுகலாம் என்பதால் இரட்டைக் கவனம் அவசியமாகிறது.
டிஜிட்டல் வெளியில் இன்று உலவுகின்ற இந்த சவால் விளையாட்டுகள் பதின் வயதினரையும், சிறுவர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. அவர்கள் எவ்வளவு பெரிய ரிஸ்கான விஷயத்தையும் செய்து இந்த சவாலில் வெற்றி பெற நினைக்கிறார்கள். அது அவர்களுடைய உடல்நலனுக்கோ, ஏன் உயிருக்கோ கூட ஆபத்தாய் முடிவதை அவர்கள் உணர்வதில்லை.
இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து கட்டளைகள் இவை.
1. நேரடியான விளையாட்டுகளே எப்போதும் பாதுகாப்பானவை, உறவையும் உடல் நலத்தையும் வளர்ப்பவை. டிஜிட்டல் விளை யாட்டுகள் உடல்நலத்துக்கு எப்போதுமே கேடு விளைவிப்பவை தான். டிஜிட்டல் தவிர்.
2. எந்த ஒரு சவாலான விளையாட்டையும் செய்ய முயலாதீர்கள். பிறர் நம்மைத் தூண்டி விடுகின்ற வார்த்தைகளுக்கு பலியாகாமல் சுயமாய் சிந்தித்து அதைத் தவிர்ப்பது மிக முக்கியம். கூட இருப்பவர்கள் ஏத்தி விடுவதற்காக நாம் வீழ்ந்து விடக் கூடாது. ஈகோ தவிர்.
3. நமக்குப் பரிச்சயமில்லாத நபரோடு எந்த விதமான விளையாட்டையோ, சவாலையோ செய்யாமல் இருக்க வேண்டியது முக்கியம். நீண்ட நெடுங்காலமாய் சோசியல் மீடியா தோழராய் இருந்தாலும் நேரடியாய்த் தெரியாவிடில் ஒதுங்கி இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். நெருக்கம் தவிர்.
4. பெற்றோருக்குத் தெரியாமல் சிறுவர்களும், பதின்வயதினரும் எந்த சவால்களையும் செய்யக் கூடாது. ரகசியம் தவிர்.
5. உளவியல் ரீதியிலான துன்புறுத்தல்கள், சவால்கள், பிரச்சினைகள் எழுந்தால் உடனே பெற்றோரிடமோ, நம்பிக்கைக்குரியவர்களிடமோ சொல்லி அவர்களுடைய உதவியை நாட வேண்டும். தனிமை தவிர்.
6. சோசியல் மீடியாவிலோ, டிஜிட்டல் வெளியிலோ உங்களுக்குக் கிடைக்கும் லைக்ஸ், ஷேரிங், கமெண்ட் போன்றவை உங்களுடைய வாழ்க்கையை எந்த விதத்திலும் அர்த்தமுள்ளதாக்கப் போவதில்லை. மாயை தவிர்.
7. சோசியல் மீடியாவில் பிரகாசிக்க விரும்பினால் உங்களுடைய திறமைகளைப் படைப்புகளாக, இசையாக, ஓவியமாக, குறும்படமாக அல்லது அது போன்ற ஏதோ ஒரு விஷயமாக இணையத்தில் பதிவேற்றி பிரபலமாகுங்கள். அது தருகின்ற மகிழ்ச்சி அலாதியானது. திறமை பயில்.
8. உங்கள் நண்பர் வட்டாரத்தில் யாரேனும் இத்தகைய சவால்களில் ஈடுபட்டால் அவர்களை திருத்த வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உண்டு. ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களின் உதவிகளை நீங்கள் நாடலாம். நட்பு பயில்.
9. பெற்றோரும் பெரியோரும் இத்தகைய புதிய புதிய சவால்களைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றை பிள்ளைகளுக்கு விலக்கி எச்சரிக்கை செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை பயில்.
10. பெற்றோர் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட வேண்டும். பிள்ளைகள் டிஜிட்டலைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கும் அதே நேரத்தில், பெற்றோரும் டிஜிட்டலை ஒதுக்கியே வைக்க வேண்டும். நேசம் பயில்.