கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்
கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கூந்தலின் வெளிப்புறத்துக்கு மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் போஷாக்கு அளிக்க வேண்டும். அதற்கு சிறப்பாக உதவும் இந்த புரோட்டின் ஹேர் பேக். இவை கூந்தலின் வளர்ச்சியை சீராக்கும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் அதை சரிசெய்து முடிக்கு போதிய வலுகொடுக்கும். அப்படி பயன்படுத்தகூடிய புரதம் நிறைந்த ஹேர் பேக் குறித்து பார்க்கலாமா?
உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை மூன்றையும் தனித்தனியாக சிறிதளவு நீரில் மூழ்க வைக்கவும். மறுநாள் காலை முதலில் உளுந்தை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி, பிறகு வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் சுற்றி அதன் பிறகு கறிவேப்பிலையை சேர்த்து மைய அரைக்கவும். இந்த விழுது எல்லாமே குளிர்ச்சி நிறைந்தது என்பதால் தேவையெனில் இதில் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் அளவு சேர்க்கலாம். இவை கூடுதலாக கூந்தலில் இருக்கும் பொடுகையும் நீக்கவல்லது.
இதை நன்றாக கலந்ததும் பிறகு கூந்தலின் ஸ்கால்ப் பகுதி முதல் வேர்ப்பகுதி வரை நன்றாக தடவி விடவும். மண்டை முதல் நுனி வரை இதை தடவினால் போதும். பிறகு சுத்தமான டவலை வெந்நீரில் பிழிந்து தலையில் இறுக கட்டிகொள்ளவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலசவும். ஷாம்பு கொண்டு தேய்க்க வேண்டாம். சாதம் வடித்த கஞ்சியை மட்டும் கொண்டு அலசலாம்.
முதல் முறை இந்த பேக் பயன்படுத்தும் போது அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம். மாலை நேரங்களில் இதை பயன்படுத்தினால் குளுமை தரக்கூடும் என்பதால் காலை வேளையில் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பயன்படுத்த கூடாது. மாதம் ஒருமுறை அல்லது அதிகம் இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தகூடாது.